தமிழகம்

தஞ்சையில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா - காவிரியில் நீர் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகமின்றி சம்பிரதாயமாக இன்று (ஆக.3) கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடி மாதம் 18ம் நாள் நீர்நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொதுமக்களால் ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த விழா காவிரி ஆற்றின் கரையோரங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

அந்நாளில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து அவல், பச்சரிசி, பழங்கள் ஆகியவற்றை கொண்டு வந்து காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்து, படையல் இட்டு வணங்கி செல்வது வழக்கம். அதேபோல் கடந்த ஓராண்டில் திருமணம் ஆன புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை கொண்டு வந்து, நீர்நிலைகளில் விட்டு காவிரி தாயை வணங்கி செல்வர். அதேபோல் பெண்கள் புதிதாக தாலிக் கயிறு மற்றும் மஞ்சள் கயிறை மாற்றிக்கொண்டு காவிரி தாயை வணங்குவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு காவிரியில் நீர்வரத்து இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகமின்றி கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையில் தொடங்கி திருவையாறு, கும்பகோணம் பகுதிகளில் இந்த விழா ஆற்றில் ஆங்காங்கே பள்ளங்களை தோண்டி அதில் வரும் ஊற்று நீரை கொண்டு, அந்த நீரில் வழிபாடு செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் கலந்து கொண்டு கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு சொற்ப எண்ணிக்கையிலே திருமணத் தம்பதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT