

ஷ்ரவன் குமார்
அசாம்: அசாமில் முறையான பயிற்சியும், மோட்டார் படகும் இன்றி, ஒரு சிறிய மரப்படகின் மூலம் வெள்ளத்தில் சிக்கிய 2,000 பேரைக் காப்பாற்றி அசத்தியுள்ளார் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய 25 வயது இளைஞன் ஷ்ரவன் குமார்.
கடந்த ஜூலை 19 அதிகாலை 3 மணிக்கு விறகு சேகரிக்க ஆற்றங்கரைக்குச் சென்றபோது, 5 கிராமங்களைச் சேர்ந்த 2,000 பேரைக் காப்பாற்றும் சூழ்நிலை வரும் என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை. வழக்கமாக மழைக்காலத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் மரங்களைச் சேகரிக்கும் ஷ்ரவன், அன்று ஆற்றின் வேகத்தையும் அடித்து வரப்பட்ட பெரிய மரங்களையும் கண்டு ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதை உணர்ந்தார்.
அவர் பயந்தது போலவே விடிவதற்குள் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. அவரது சொந்த வீட்டையும் தண்ணீர் சூழ்ந்தது. தனது தாயும், சகோதரரும் பொருட்களைப் பாதுகாக்கப் போராடியபோதும், குடும்பத்திற்கு உதவச் செல்லாமல் பிறரைக் காப்பாற்றவே ஷ்ரவன் முடிவெடுத்தார்.
“நான் வீட்டைப் பாதுகாக்கச் சென்றிருந்தால் மற்றவர்களைக் காப்பாற்ற ஆள் இருந்திருக்க மாட்டார்கள்” என்கிறார் ஷ்ரவன். முறையான பயிற்சியோ, விசைப்படகோ இல்லாத இவர், பத்தாம் வகுப்போடு படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்றைப் பற்றி நன்கு தெரிந்திருந்த இவர், “துலுங்கா நாவ்” என்ற சிறிய மரப்படகையும், நண்பர்களையும் மட்டுமே நம்பி, அனுபவமிக்க படகோட்டிகளும் கூட பயந்த ஆபத்தான வெள்ள நீரில் இறங்கினார். காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த மீட்பு நடவடிக்கை இரவையும் தாண்டி அடுத்த நாள் வரை நீடித்தது.
மின்சாரமும், தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில், வீட்டின் கூரைகளிலும் இடுக்குகளிலும் தவித்த குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை அஞ்சாமல் மீட்டனர். இருளில் மிதந்து வந்த மரக்கட்டைகள் மோதி படகு கவிழும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் செயல்பட்ட இந்த இளைஞர்கள் குழு, 5 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பேரைக் காப்பாற்றிப் புதிய சாதனை படைத்தது. அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதேவேளையில், ஜூலை 19 வெள்ளத்திற்குப் பின், அசாமின் வெள்ள நிலைமையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது 44 நிவாரண முகாம்களில் 15,000-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். மேலும், 17 நிவாரண விநியோக மையங்கள் மூலம் 5,569 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.