சென்னை: கடந்த திமுக ஆட்சியின்போது நடைபெற்ற சட்டக் குளறுபடிகளால்தான் மேகேதாட்டு விவகாரம் தற்போது மிகப்பெரிய சோதனையாக மாறியுள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி நதிநீர் மற்றும் மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறுவது உண்மைக்குப் புறம்பானது.
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழகத்தின் நீர் உரிமையையும் பாதுகாக்க முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தொடர்ந்துஉறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின்போது, மேகேதாட்டு விவகாரத்தில் சட்ட ரீதியான பின்னடைவுகள் ஏற்பட்டன. கர்நாடகாவின் திட்ட அறிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தமிழக உரிமையைக் காக்கும் கடைசி வாய்ப்பாக இருந்த மறுசீராய்வு மனு மீதும் அன்றைய திமுக அரசு வலுவான வாதங்களை முன்வைக்கவில்லை. கடந்த காலத்தில் நடைபெற்ற இத்தகைய சட்டக் குளறுபடிகளால்தான் மேகேதாட்டு விவகாரம் இன்று மிகப்பெரிய சோதனையாக மாறியுள்ளது.
நாங்கள் கடந்த கால தவறுகளைப் பேசுவதன் நோக்கம் தமிழகத்தின் உரிமைக் குரலை திசைதிருப்புவது அல்ல. எங்களுக்கு அதுபோன்ற குறுகிய அரசியல் எண்ணமும் கிடையாது. ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் யாரிடம் இருந்து வந்தாலும் ஏற்கத் தயாராக இருக்கிறோம்.
காவிரி விவகாரம் என்பது அரசியல் ஆதாயத்துக்கான கணக்கு அல்ல. அது தமிழக மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு சட்டப்பூர்வமாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தொடர்ந்து போராடும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும் வரை இந்த அரசு ஓயாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.