சென்னை: புதிய பிரத்யேக ஆதார் சேவை மையம் சென்னை அண்ணா நகரில் நேற்று திறக்கப்பட்டது. நாளொன்றுக்கு 1000 பேருக்கு இந்த மையம் மூலம் சேவை வழங்கப்படவுள்ளது.
சென்னை அண்ணா நகர் கிழக்கில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவன கட்டிடத்தில் புதிதாக ஆதார் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு மையத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பெங்களூரு மண்டல துணை இயக்குநர் ஆனி ஜாய்ஸ், இயக்குநர் பவன் குமார் பாவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மொத்தம் 16 சேவை கவுன்ட்டர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். தினசரி 500 பேருக்கு ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும், 500 பேருக்கு நேரடியாக டோக்கன்கள் வழங்கப்பட்டும் என 1,000 பேருக்கு சேவை வழங்கப்பட இருக்கிறது.