கோவை: கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் மூவரை போலீஸார் நேற்று சுட்டுப்பிடித்தனர். இதில், காலில் காயம்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிப் என்பவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கோவை - மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையத்தில், தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இரு நாட்களுக்கு முன்பு, 13 வீடுகளின் பூட்டை உடைத்து 42 பவுன் நகை, ரூ. 1.50 லட்சம் பணம், 500 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருடப்பட்டது.
இது தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கொண்ட கும்பல், குனியமுத்தூரை அடுத்த பி.கே.புதூர் திருநகர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று காலை தனிப்படை போலீஸார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸாரை தாக்கி விட்டு அவர்கள் தப்பிச்செல்ல முயன்றபோது, போலீஸார் மூவரையும் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
பிடிபட்ட மூவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள், உத்தரப்பிரதேச மாநிலம் மஜித்புவா பகுதியைச் சேர்ந்த இர்பான் (43), காஜிவாலா பகுதியைச் சேர்ந்த கல்லு ஆரிப் (60), காஜிபூர் பகுதியைச் சேர்ந்த ஆசிப் (45) என்பது தெரியவந்தது.
போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் மூவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதில் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆசிப் என்பவருக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஆசிப் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கியால் காலில் சுடப்பட்டதில், ஆசிப்பிற்கு தொடர்ச்சியாக ரத்தம் வெளியேறியது, உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. அவரது இறப்பு குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், வழக்கில் தொடர்புடையவர் உயிரிழந்ததால், நீதிமன்ற விசாரணையும் மேற்கொள்ளப்பட உள்ளது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆசிப்பின் உடல் உடற்கூறு ஆய்விற்காக, கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.