புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி |கோப்புப் படம்
புதுச்சேரி: "தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கிடைக்க புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை" என பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 5 ஆண்டு முடிவுற்ற நிலையில் எந்தெந்த திட்டங்களை கொண்டுவந்து, செயல்படுத்தியுள்ளது என்பது மக்களுக்கே தெரியும். இவை அனைத்தும் மத்திய அரசு, பிரதமர் மோடியின் உதவியால்தான் செய்ய முடிந்தது.
விவசாயிகள், ஆதிதிராவிடர் மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். சிறந்த கல்வி அளிக்க வேண்டும் என திட்டமிட்டு எங்கள் அரசு செயல்பட்டுள்ளது. சமூக பாதுகாப்புக்காக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியது தேசிய ஜனநாயக கூட்டணி. அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதியோர், மாற்றுத்திறனாளி, மீனவர் உதவித்தொகை, வீடு கட்டும் திட்டம் என அனைத்து திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி.
பிரதமர் விரும்பியபடி பெஸ்ட் புதுவை என்ற நிலைக்கு அரசு கொண்டுவந்துள்ளது. மேலும் பல திட்டங்களை கொண்டுவந்து மாநிலத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்ல பிரதமர் வந்துள்ளார். நாட்டிலேயே சிறந்த மாநிலமாக புதுவை பெயர் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்கள் வியந்து பாராட்டும் வகையில் புதுவை மாநிலம் வளர்ச்சி உள்ளது. இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக பிரதமர் மோடி உள்ளார்.
திட்டங்களை நிறைவேற்றினாலும், எங்களிடம் சிறிய வலி, கோரிக்கை உண்டு. எங்களுக்கு மாநில அந்தஸ்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தனி அதிகாரம் வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. புதுவை மக்கள் பல ஆண்டுகளாக மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
சட்டசபையில் சுமார் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எந்த வளர்ச்சி பெற்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைச்சர்கள், அமைச்சரவைக்கு அதிகாரம் வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. பிரதமர் இந்த கோரிக்கையை ஏற்று அதை செய்து கொடுப்பார்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்தார். அவர் இக்கோரிக்கையை வைத்தபோது அரங்கில் கைத்தட்டல் அதிகளவில் எழுந்தது.