சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று மின் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது, மின் துறையில் திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடந்ததாகவும், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் பற்றியும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், தற்போதைய அமைச்சர் நிர்மல் குமாருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் மின் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி பேசுகையில், “தவெக அரசில் 5 ஆண்டுகளில் மின் துறையில் கடனே வாங்க மாட்டீர்களா? கடன் அதிகரிக்காதா? புதிய திட்டங்களுக்கு அரசு நிதிகளைக் கொடுக்குமா? அல்லது முதல்வரிடம் நிதிகளைக் கேட்டு மின்வாரியத்தில் கடன் சுமை ஏறாமல் பார்த்துக்கொள்வீர்களா?.
திமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல், விசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மின் துறைக்கு 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் என்று அமைச்சர் சொல்கிறார். தவெக அரசில் மாற்றமே இருக்காதா? என்பதைப் பார்க்கலாம்.
மேலும், அமைச்சரை மாற்றுவது முதல்வரின் விருப்பம். பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தவெக அரசில் இதுவரை மின் விநியோகம் செய்வதற்கான துறை ரீதியான கூட்டமே நடத்தவில்லை. லேசான மழைக்கு சென்னையில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதுதான் இன்றைய நிலைமை” என்று பேசினார்.
பின்னர், மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், “கடந்த திமுக ஆட்சியில் மின் துறையில் போடப்பட்ட டெண்டர்களை ஆராய்ந்ததில் 45 டெண்டர்களில் பெரிய அளவில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.
மின்சாரத்துறை பொதுத்துறை நிறுவனம்; இது தானாக இயங்க முடியாது. அரசு ஓரளவு தான் நிதி கொடுக்கும். கடன் வாங்கித்தான் ஆகவேண்டும். ஆனால் கடனை எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான், ஒவ்வொரு ரூபாயும் மக்கள் பயன்பாட்டுக்கு செல்கிறதா எனத் தெரியும்.
போக்குவரத்து துறையில் இருந்தபோது, செந்தில் பாலாஜி நிறைய ஆட்களை வேலைக்கு எடுத்திருக்கிறார். ஆனால், மின்சாரத்துறைக்கு வந்த பிறகு அவர் ஆட்களை எடுக்கவில்லை. அவருக்கு இதைவிட பிற வேலைகள் இருந்திருக்கும் போல” என்று கூறினார்.