கரூர்: தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது மதுரை அவனியாபுரத்தில் பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
மதுரை மணலூர் புளியங்குளத்தை சேர்ந்த சிலர், கடந்த 2012-ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மதுரையை அடுத்த சிந்தாமணி அருகே வந்தபோது ஒரு கும்பல் வழிமறித்து பெட்ரோல் குண்டுகளை வீசியது.
இதில், காரில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொலை வழக்கில் மதுரை மேல அனுப்பானடி ராமர் பாண்டி, சிந்தாமணியைச் சேர்ந்த மணிகண்டன் (கார்த்திக்), முத்துவிஜி, சந்திர சேகர், சோனையா, நாகராஜ், முத்துக்கருப்பன், மோகன், விக்னேஷ், சந்தோஷ் ஆகிய 11 பேரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை காலத்தில் 2013-ல் முத்துவிஜி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, குற்றவாளிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக்கூறி, இந்த வழக்கு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய ராமர் பாண்டி, 2024-ல் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ஊர் திரும்பும் வழியில், அரவக்குறிச்சி அருகே வெட்டிக் கொல்லப்பட்டார்.
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் 69 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. 48 சாட்சிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 21 சாட்சிகளின் விசாரணை தள்ளுபடி செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி கே.எச். இளவழகன், கைது செய்யப்பட்ட 11 பேரில் 2 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பளித்தார்.
அவர்களுக்கான தண்டனை விவரம் நாளை (மார்ச் 25) அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தீர்ப்பையொட்டி, கரூர் நீதிமன்றத்தில் டிஎஸ்பி தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.