தமிழகம்

பெரம்பலூர் வெள்ளாற்றில் சிக்கி தவித்த ஆத்தூர் தொழிலாளிகள் 9 பேர் பத்திரமாக மீட்பு

கனமழையால் தொழுதூர் அணையில் நீர் திறக்கப்பட்டதால் விபரீதம்

எஸ்.ஸ்டாலின்

பெரம்பலூர்: பெரம்பலூர் வெள்ளாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி தவித்த ஆத்தூர் தொழிலாளிகள் 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

பாதிக்கப்பட்ட இடங்களை வருவாய் துறையினர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் வேப்பந்தட்டை வட்டம் கல்லாறு மற்றும் குன்னம் வட்டத்தில் உள்ள வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதற்கிடையில், குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு அருகே உள்ள தொழுதூர் அணையின் அருகே ஆற்றுப் பகுதியில் பொருட்காட்சி பொருட்களை எடுப்பதற்காக 9 பேர் குழுவினர் வந்திருந்தனர். இரவு நேரம் என்பதால் அவர்கள் வெள்ளாற்று கரையோரம் தங்கினர். அதிகாலை 5 மணியளவில் தொழுதூர் அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டதால், வெள்ளாற்றில் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் சிக்கிக் கொண்ட 9 பேரும் தங்களை மீட்கும்படி வேப்பூர் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சந்திரமோகன், தியாகராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கயிறு மூலம் 9 பேரையும் பத்திரமாக மீட்டனர். விசாரணையில் மீட்கப்பட்ட 9 பேரும் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த 20 நாட்களாக லப்பைக்குடிக்காட்டில் உள்ள வெள்ளாற்றின் அருகே ராட்டினம் உள்பட பல்வேறு பொருட்காட்சிகள் நடத்தினர்.

3 நாட்களுக்கு முன்பு பொருட்காட்சி முடிந்து பொருட்களை மினிலாரி மூலம் ஆத்தூருக்கு எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு பொருட்களை எடுக்க வந்தவர்கள், வெள்ளாற்றின் அருகே தங்கிவிட்டனர். அதிகாலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். இருப்பினும் அவர்களை தீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டுவிட்டனர். மினிலாரி மட்டும் ஆற்றின் நடுவே உள்ளது. தண்ணீர் முழுவதுமாக குறைந்த பின்னர் தான் மினி லாரியை மீட்க முடியும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வேப்பூர் தீயணைப்புப் படையை சேர்ந்த தியாகராஜன் இந்து தமிழ் திசைக்கு கூறுகையில், “வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக 5 மணிக்கு தகவல் கிடைத்தது. வேப்பூர், பெரம்பலூர், செந்துரை ஆகிய 3 தீயணைப்புப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டோம். 9 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் இருப்பதால் லாரியை மீட்க முடியவில்லை” என்றார்.

இதற்கிடையில் பெரம்பலூர் ஆட்சியர் அப்துல் ராசிக், “வெள்ள பாதிப்பு உள்ள இடங்களில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் அப்துல் ராசிக் கூறுகையில், “பெரம்பலூரில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. எனவே வேப்பந்தட்டை வட்டம் கல்லாறு மற்றும் குன்னம் வட்டம் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன், பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரும்படி” அறிவுறுத்தியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT