மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1.31 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1.000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் பலனை உணர்ந்து மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தை பின்பற்றத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் கோடைகாலச் சிறப்புத் தொகையுடன் சேர்த்து ரூ.5000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதை பெண்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ‘விடியல் பயணம்’ திட்டத்தின் மூலம் இதுவரை 881 கோடி முறை பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணித்துள்ளனர். இதனால் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.888 வரை பெண்களால் சேமிக்க முடிகிறது.
இத்தகைய பல்வேறு முயற்சிகள் காரணமாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமையை நாம் அடைந்துள்ளோம். இதுதவிர பெண்கள் பெயரில் சொத்து வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கடந்தாண்டு ஏப்ரல் முதல் சொத்து பதிவுக் கட்டணம் மகளிருக்கு 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3.71 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். திருநங்கைகள் சுயமாகத் தொழில் செய்வதை ஊக்குவிக்க இந்த அரசு மானியம் வழங்குகிறது. இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை
தமிழகத்தின் தனித்துவமான விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறும் வகையில், 9 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 32 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 5 ஆண்டுகளில் தனித்துவமான விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 41 விளைபொருட்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டன. இதில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை ஆகிய 9 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 32 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.