சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள 350 தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது.
இதற்காக இந்த பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், காவல் துறைக்கு உதவியாக, ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை அந்தோணியார் தேவாலயம், அண்ணா சாலை புனித ஜார்ஜ் (கத்தீட்ரல்) தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவு கூடும் தேவாலயங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.