கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 3 வயது பெண் குழந்தையின் குடும்பத்துக்கு அரசு சார்பில், ரூ.8 லட்சம் நிவாரண நிதிக்கான ஆணையை நேற்று செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சர் குமார் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையையொட்டியுள்ள புதுப்பேட்டை பகுதியில் கடந்த 14-ம் தேதி மாலை, வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த பிஹார் மாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனது. நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு அந்தக்குழந்தை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அங்குள்ள முட்புதரில் வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் காலை அந்தக் குழந்தை உயிரிழந்தது.
இச்சம்பவம் தொடர்பாக, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் போக்சோ, கொலை உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், புதுப்பேட்டை பகுதியில் தங்கியிருந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பிப்பின் மான்ஜி (19) என்ற இளைஞர், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பிஸ்கட் கொடுத்து அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, பிப்பின் மான்ஜி, சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், குழந்தையின் பெற்றோரை நேற்று கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அமைச்சர் ரா.குமார் சந்தித்து, ஆறுதல் கூறினார்.
முதல்வர் விஜய் வருத்தப்பட்ட தகவலையும் தெரிவித்தார். பிறகு, அவர், மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தமிழக அரசின் குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறை சார்பில், குழந்தையின் குடும்பத்தினரிடம் ரூ.8 லட்சம் நிவாரண நிதிக்கான ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, திருவள்ளூர் ஆட்சியர் கவிதா, பொன்னேரி சார் ஆட்சியர் அப்துல்ராசிக், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நிஷாந்தினி, துணை ஆட்சியர் சண்முக பிரீத்தா, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.