மதுரை: காவல் துறையில் போலீசாருக்கு 8 மணி நேர வேலை திட்டம் அமல்படுத்தக் கோரிய வழக்கில் அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக காவலர் குடும்ப நல அறக்கட்டளையின் தலைவர் சத்ய பிரியா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் பட்டாலியன் போலீசாரை சட்ட ஒழுங்கு காவல்துறையினரோடு இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கவும், தமிழக காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலையையும் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையையும் அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "காவல் துறையில் சீருடையைக் கூட ஒரு குறிப்பிட்ட கடையில் தான் வாங்க வேண்டும் என வற்புறுத்தப்படுகின்றனர். பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட பட்டாலியன் காவல்துறை பிற மாநிலங்களில் நடைமுறையில் இல்லாதபோது, தமிழகத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ளது அவர்களின் திறன் முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை" என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், "வழக்கு தொடர்பாக தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 28-க்கு தள்ளிவைத்தனர்.