

அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்கள் குழு சார்பில் எருமேலியில் நடைபெற்ற பேட்டை துள்ளல் ஊர்வலம்.
தேனி: சபரிமலையில் வரும் 14-ம் தேதி மகரஜோதி திருவிழா நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமாக, எருமேலியில் பாரம்பரிய பக்தர்கள் குழு சார்பில் பேட்டை துள்ளல் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சபரிமலையில் நாளை மறுநாள் (ஜன.14) பிரசித்தி பெற்ற மகரஜோதி திருவிழா நடைபெறுகிறது.
இதுகுறித்து சபரிமலை சிறப்பு அதிகாரி ஏடிஎம்.அருண் எஸ்.நாயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி, 13-ம் தேதிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த 35 ஆயிரம் பக்தர்களும், 14-ம் தேதியில் 30 ஆயிரம் பக்தர்களும், தலா 5 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலமும் அனுமதிக்கப்படுவர்.
பின்னர், 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தினமும் 50 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5 ஆயிரம் பேரும், 19-ம் தேதி 30 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுவர் என்றார்.
அப்போது, சந்நிதான சிறப்பு அதிகாரி சுஜித்தாஸ், நிர்வாக நீதிபதி ஜோசப் ஸ்டீபன் ராபின், தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி ஓ.ஜி.பிஜு உட்பட பலர் உடன் இருந்தனர். தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகையில், ‘புல்மேட்டில் மகரவிளக்கு அன்று தொலைத் தொடர்புக்காக பிஎஸ்என்எல் தற்காலிக கோபுரத்தை அமைத்துள்ளது.
இன்று முதல் இந்தத் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்கு வரும். மேலும், சபரிமலை, பம்பா மற்றும் நிலக்கல்லில் உள்ள 30 அவசர மருத்துவ மையங்களில் வைஃபை வசதியையும் பிஎஸ்என்எல் வழங்கியுள்ளது’ என்றனர்.
கேரள அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், ‘திருவிழாவுக்காக ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும். இன்று முதல் பம்பை ஹில்டாப் பகுதியில் தனியார் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
மகரஜோதிக்கு முன்னோட்ட மாக, நேற்று அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் குழு சார்பில், எருமேலியில் பேட்டை துள்ளல் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.