முதல்வர் விஜய் முன்னிலையில் சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில் அமைச்சர்கள் கீர்த்தனா, முகமது பர்வேஸ், தலைமைச் செயலாளர் சாய்குமார், துறை செயலாளர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை: வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 65,786 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.58,214 கோடி மதிப்பிலான 78 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் கடந்த 200 நாட்களில் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தொழில் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ‘வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாடு 2026’ சென்னையை அடுத்த கோவளத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு முதல்வர் விஜய் தலைமை வகித்தார்.
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ், தலைமைச் செயலர் சாய்குமார், தொழில் துறை செயலர் விஜயகுமார், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், செயல் இயக்குநர் பல்லவி வர்மா, தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கிண்டியில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் முதல் மாநாட்டில், ரூ.67,452 கோடிக்கு 97 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது மாநாட்டில், ரூ.58,214 கோடி முதலீட்டில் 65,786 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தாகின.
நிகழ்ச்சியில், ரூ.7,925 கோடி முதலீட்டில் 19,965 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 15 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.1,430 கோடி முதலீட்டில் 1,710 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 6 முடிவுற்ற திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும், யுபிஎஸ், ஆட்டோலிவ், ஸ்டைல்கோவ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஓம்ரான் ஆகிய நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
குறிப்பாக, தென் கொரியாவைச் சேர்ந்த போஸ்கோ நிறுவனம், கிருஷ்ணகிரியில் ரூ.250 கோடியில் எஃகு பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீட்டில் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் வழங்கும் ஹுவாஷின் ஆட்டோமோட்டிவ் மற்றும் சியோன் இ-ஹ்வா சம்மிட் நிறுவனங்கள் முறையே ரூ.850 கோடி, ரூ.520 கோடி முதலீட்டில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள உள்ளன. ஸ்வீடனைச் சேர்ந்த பிஎம்சி ஹைட்ராலிக்ஸ் நிறுவனம், கிருஷ்ணகிரியில் ரூ.300 கோடியிலும், ஜே.கே. ஃபென்னர் நிறுவனம் சிவகங்கையில் ரூ.900 கோடியிலும் புதிய ஆலைகளை அமைக்க உள்ளன.
பிரேசிலைச் சேர்ந்த டபிள்யூஇஜி நிறுவனம் தருமபுரியில் ரூ.2,000 கோடியில் உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய உள்ளது. ரானா செமி கண்டக்டர்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரியில் ரூ.150 கோடியில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. தமிழகத்தின் முன்னணி ஜவுளி நிறுவனங்களான ராம்ராஜ், எஸ்சிஎம், அவனீதா, கேபிஆர் உள்ளிட்ட நிறுவனங்களும் முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
ஜவுளித் துறை உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ரூ.3,928 கோடி முதலீட்டில் 14,650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், ரூ.15,250 கோடியில் 12 பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய சிவகங்கை, தருமபுரி, விருதுநகர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் 18 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.17,413 கோடி முதலீட்டில் 16,411 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பிரேசில், பின்லாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்வீடன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 14 நிறுவனங்கள் ரூ.14,798 கோடி அந்நிய நேரடி முதலீடு செய்ய உள்ளன. இதுதவிர, சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் ட்ரோன் உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாடு, சோதனை மற்றும் பயிற்சிக்கான பிரத்யேக தொழில்துறை மையம் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் பொருட்களைச் சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய அமேசான் செல்லர் சர்வீசஸ் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியுடைய புதிய ஏற்றுமதியாளர்களுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மொத்தம் கையெழுத்தான 78 ஒப்பந்தங்களில் 58 புதிய தொழில் திட்டங்களுக்கானவை. 18 ஒப்பந்தங்கள் ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகளின் விரிவாக்கத்துக்கானவை. 2 ஒப்பந்தங்கள் புதிய முதலீடு மற்றும் விரிவாக்கம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கலப்புத் திட்டங்களாகும்.
இந்த மாநாட்டுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையும் சேர்த்து, 200 நாட்களில் மொத்தம் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.73 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,98,557 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், “கடந்த மே மாதம் 23 துறைகளில் ரூ.1.14 லட்சம் கோடி மதிப்பிலான 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 1.32 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். தற்போது நடைபெற்ற மாநாட்டில் ரூ.58,214 கோடி மதிப்பிலான மேலும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் 65,786 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்த ஒப்பந்தங்களில் 13 நிறுவனங்கள் முதல் முறையாக தமிழகத்திலும், 4 நிறுவனங்கள் முதல் முறையாக இந்தியாவிலும் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த முதலீடு ரூ.1.73 லட்சம் கோடியாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 190 ஆகவும் உயர்ந்துள்ளது” என்றார்.