தமிழகம்

5 ஆண்டுகளில் 70,000+ படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்: எல்.முருகன் தகவல்

டெக்ஸ்டர்

புதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். 

இது தொடர்பாக மக்களவையில் எதிர்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: “மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சத்தின் கீழ், செயல்படும் சட்டப்பூர்வ அமைப்பான மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திரைப்பட சட்டம் 1952, திரைப்பட தணிக்கை விதிகள் 2024 மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதலின் கீழ், மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக திரைப்படங்களை தணிக்கை செய்கிறது.

          

இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நாகரீகம், ஒழுக்கம் போன்ற சட்டப்பூர்வ அம்சங்களை மீறும் வகையிலோ, அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் போன்றவை இடம் பெற்றாலோ மட்டுமே காட்சிகளை நீக்குவதற்கு அல்லது மாற்றியமைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) 71,963 திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திரைப்பட சட்டம் வகை செய்கிறது. இது போன்ற சூழல்களில் நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படுகின்றன” இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT