தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் 144 தடை: 7,000 போலீஸ் குவிப்பு, பதற்றம்

தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? முதல்வர் ஆலோசனை

செய்திப்பிரிவு

மதுரை/ சென்னை: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். அங்கு எழுந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை நாளான இன்று (24-ம் தேதி) மாலை தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு நேற்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இருப்பினும் இன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கிடையே திருக்கார்த்திகை நாளையொட்டி முருகப்பெருமானை தரிசிக்கவும், தீப தரிசனம் காணவும் ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்காக 4 டிஐஜிக்கள், 7 எஸ்பிக்கள், 10 கூடுதல் எஸ்பிக்கள், 45 டிஎஸ்பிக்கள், 100-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 7,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகர் மற்றும் புறநகரில் இருந்து 3,000 போலீஸாரும், வெளிமாவட்டங்களில் இருந்து 4,000-க்கும் மேற்பட்ட போலீஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் போராட்டங்களைத் தடுக்கும் வகையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

கோயில், மலையடிவாரப் பாதைகள், மலை உச்சியில் உள்ள தீபத்தூண், காசி விஸ்வநாதர் கோயில், தர்கா உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை உச்சியில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

உச்சிப்பிள்ளையார் கோயில், தீபத்தூண், நெல்லித்தோப்பு, தர்கா செல்லும் பாதைகள் உள்ளிட்ட பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாரும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் என்.ஆனந்த், சிடிஆர்.நிர்மல்குமார், தலைமைச் செயலர் எம்.சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, தீபம் ஏற்றுவதில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், செயல்படுத்தாவிட்டால் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள், அடுத்தகட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சட்டம் ஒழுங்கில் எந்த பிரச்னைகளும் வராதபடி பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதற்றமான சூழ்நிலைக்கு இடையே திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை விழாவின் 9-ம் நாளான இன்று மாலை 6 மணிக்கு மேல் வழக்கம் போல் பாலதீபம் ஏற்றப்பட்டு, மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் முன்பாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்தநிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவு 163-ன் கீழ் தடை (பழைய சட்டம் 144 தடை உத்தரவுக்கு இணையானது) உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் ஆதரவாகவும், எதிராகவும் திரள வாய்ப்புள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மதுரை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இரு தரப்பினரும் அதிக அளவில் திரண்டு போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் பொது சொத்துக்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி, மதுரை மாவட்ட எல்லைக்குள் எந்தவிதமான பொதுக்கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் அல்லது பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் மலையில் பொதுமக்கள் ஏறிச் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவு நவம்பர் 23-ம் தேதி இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்து, நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை நடைமுறையில் இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசின் ஆய்வறிக்கையால் சர்ச்சை

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில், தமிழக அரசின் தொல்லியல் ஆய்வறிக்கை வெளியாகி கூடுதல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல. நில அளவைக்கல், அந்தக்கல்லின் மேல் துளை உள்ளது.

கல்லை சுற்றியுள்ள பாறையில் அளவீட்டு குறியீடுகள் உள்ளன. தமிழகம் முழுவதும் இதுபோல் மொத்தம் 484 நில அளவைக் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் 32, தூத்துக்குடியில் 33, நெல்லையில் 35, திண்டுக்கல்லில் 28, மதுரை, திருச்சியில் தலா 10 நில அளவைக் கற்கள் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. அங்கு தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. தற்போது உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அரசின் ஆய்வறிக்கை வெளியாகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சீராய்வு மனு இன்று விசாரிக்க வாய்ப்பில்லை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவுக்கு இதுவரை வழக்கு எண் வழங்கப்படவில்லை. உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் விடுமுறையில் இருந்ததால், மனு நேற்று விசாரணைக்கு வரவில்லை. சீராய்வு மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு முறையிட்டிருந்தால், மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்க வாய்ப்பிருந்தது.

ஆனால், தமிழக அரசு தரப்பில் அத்தகைய முறையீடு எதுவும் செய்யப்படவில்லை. குருநானக்ஜெயந்தியை முன்னிட்டு இன்று உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை. இதனால், சீராய்வு மனு இன்றும் விசாரணைக்கு வர வாய்ப்பில்லை. கார்த்திகை தீபத் திருவிழா முடிந்த பிறகே விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT