பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்.
சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகிய முக்கிய இடங்களை முற்றுகையிட முயன்ற 700-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளுக்காக நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.
முன்னதாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று பின்னர் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தொடர் போரட்டங்களை நடத்திவந்த நிலையில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை மற்றும் தலைமைச் செயலகம் அருகே போராட்டம் நடத்தி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 27-ம் தேதி கோட்டைநோக்கி பேரணி என்ற வகையில் பாரிமுனையில் போராட்டம் நடத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் முயன்றனர். அறிவாலயத்துக்கு முன்பு உள்ள அண்ணா சாலையில் அமர்ந்து, தமிழக அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மைப் பணியாளர்களை போலீஸார் கைது செய்ய முயன்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஏராளமான பணியாளர்கள் திரண்டு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், அங்கு போராட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்த நடவடிக்கையின் போது சில பெண் பணியாளர்கள் மயக்கமுற்று விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இறுதியாக அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடத்தை தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே கருணாநிதி சிலை முன்பும் தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர். அங்கேயும் போலீஸார், அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
அந்தவகையில் நேற்று நடந்த போராட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையின் மூன்று முக்கிய இடங்களில் நடந்த இந்தப் போராட்டங்களால் அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.