ராமேசுவரம்: எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை சுமார் 400 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
நெடுந்தீவு அருகே ராமேசுவரத்தைச் சேர்ந்த சசிக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து, படகிலிருந்த ராமர் (38), வீரணன் (55), கருப் பையா (53) ஆபிரஹாம் (23 ஆகிய 4 மீனவர்களை கைது செய்து ஊர்காவல்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர்.
மேலும் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த சிம்சன் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப்படகின் பக்கவாட்டு பகுதியில் உள்ள மரப்பலகை உடைந்து கடல் நீர்படகுக்குள் புகுந்ததால், நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை நடுக்கடலில் மூழ்கியது.
படகில் இருந்த சீனிவாசன், செபஸ்தியான், சூசை வியாகுலம் ஆகிய 3 மீனவர்களும் கடலில் குதித்து ஐஸ் பெட்டி மற்றும் டீசல் கேன்களை பிடித்த வண்ணம் வெகுநேரமாக தத்தளித்து கொண்டிருந்தனர்.
இவர்களை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டு ஊர்காவல்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு வந்தனர். 7 மீனவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.