உயிரிழந்த விஜயாள், அண்ணாமலை, மீனாட்சி, முத்துக்குமார், மீனா

 
தமிழகம்

நேபாளத்தில் விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

சொந்த ஊருக்கு உடல்களை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி / தேவகோட்டை: பொள்​ளாச்சி மற்​றும் தேவகோட்டை பகு​தி​களில் இருந்து நேபாளத்​துக்கு குடும்​பத்​துடன் ஆன்​மிகச் சுற்​றுலா சென்ற 7 பேர் நேற்று முன்​தினம் அங்கு நடந்த சாலை விபத்​தில் உயி​ரிழந்​தனர்.

அவர்​களது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்​டம் மாக்​கி​னாம்​பட்​டி, மின்​நகர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் முத்​துக்​கு​மார் (55). இவர் பொள்​ளாச்​சி​யில் எலெக்ட்​ரிக்​கல் கடை நடத்தி வந்​தார். இவரது மனைவி மீனா (48).

          

இவர்​களுக்கு ஒரு மகள் மற்​றும் ஒரு மகன் உள்​ளனர். இந்நிலையில், முத்துக்குமார் மற்றும் மீனா, பொள்ளாச்சி சிடிசி காலனியைச் சேர்ந்த பாபு, அவரது மனைவி தமிழரசி (65) ஆகியோர் கடந்த 7-ம் தேதி நேபாளத்துக்கு 13 நாட்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றனர்.

இதேபோன்று தேவகோட்​டையைச் சேர்ந்த ஓய்​வு​பெற்ற வங்கி மேலா​ளர் அண்​ணா​மலை (60), அவரது மனைவி விஜ​யாள் (56), சகோ​தரி மீனாட்சி (61) உள்​ளிட்​டோரும் இவர்​களு​டன் ஆன்​மிகச் சுற்​றுலா​வுக்கு புறப்​பட்​டனர்.

இவ்​வாறு தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​யில் இருந்​தும் 25-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் ஒரு குழு​வாக சென்​னை​யில் இருந்து கங்கா காவேரி ரயில் மூலம் பிரயாக்ராஜ் சென்​றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்த பின்​னர் திரிவேணி சங்​கமம், அயோத்​தி, முக்​தி​நாத் உள்​ளிட்ட இடங்​களுக்​குச் சென்று தரிசனம் செய்​தனர்.

பின்​னர் நேபாளம் கண்​டகி மாகாணத்​தில் உள்ள மனக்​கமனா கோயிலுக்கு 14 பேர் கொண்ட ஒரு குழு​வினர் ஒரு வேனிலும், 9 பேர் கொண்ட ஒரு குழு​வினர் மற்​றொரு வேனிலும் சென்று தரிசனம் செய்​து​விட்டு நேற்று முன்​தினம் இரவு தங்​குமிடத்​துக்கு திரும்​பிக்​கொண்​டிருந்​தனர்.

சாஹித் லாகான் கிராமத்​தில் வந்​த​போது 14 பேர் பயணம் செய்த வேன் கட்​டுப்​பாட்டை இழந்து மலைப்​பாதையை விட்டு விலகி 150 மீட்​டர் ஆழமான பள்​ளத்​தில் விழுந்​தது.

இதில் முத்துக்குமார், அவரது மனைவி மீனா மற்றும் தமிழரசி ஆகியோரும் தேவகோட்டை அண்​ணா​மலை, அவரது மனைவி விஜ​யாள், சகோ​தரி மீனாட்சி மற்​றும் ஒரு​வர் என 7 பேர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். பொள்​ளாச்சி அன்​சாரி வீதி​யைச் சேர்ந்த மீனாட்சி உள்​ளிட்ட 9 பேர் காயம் அடைந்​தனர்.

அவர்​கள் மீட்​கப்​பட்டு அரு​கில் உள்ள சித்​வான் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சைக்காக அனு​ம​திக்​கப்​பட்​டனர். உயி​ரிழந்​தவர்​களின் உடல்​கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்​களிடம் ஒப்​படைக்கப்​பட​வுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், உயி​ரிழந்​தவர் உடல்​களை சொந்த ஊருக்கு கொண்​டுவர மத்​திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்​திருந்தனர்.

இந்தநிலையில் நேபாளத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்​மிகச் சுற்​றுலா சென்று விபத்தில் 7 பேர் உயி​ரிழந்த சம்​பவம் உறவினர்​களின்​ மத்​தி​யில்​ சோகத்​தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT