சென்னை: தமிழகத்தில் நீலகிரி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை (பிப்.6) பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் பிப்.11-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை முதல் 9-ம் தேதி வரை நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மிசிசல், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
பதிவான குறைந்தபட்ச (குளிர்) வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சமவெளிப்பகுதியான திருத்தணியில் 16.5 டிகிரி செல்சியஸ், மலைப்பகுதியான கொடைக்கானலில் 7.7 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.