கோவை- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் (கோப்புப்படம்). 
தமிழகம்

'இந்து தமிழ்' செய்தி எதிரொலி: மேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் சிறப்பு ரயில் மார்ச் 15 முதல் இயக்கம்

க.சக்திவேல்

கரோனா பரவல் காரணமாக மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை தினமும் 5 முறை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறை அறிவித்து வரும் நிலையில், மேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் மட்டும் இயக்கப்படாமல் இருந்தது.

மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் பேருந்துகள் அனைத்தும் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. இதனால், பயணத் தொலைவு மற்றும் நேரம் அதிகமானது. கோவைக்கு தினசரி அலுவலகம், வேலைக்கு வந்து செல்வோர், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். எனவே, மேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இது தொடர்பாக 'இந்து தமிழ்' நாளிதழில் கடந்த 5-ம் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்படும் பேருந்துகளால் பயணிகள் அவதி மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுமா? என்ற தலைப்பில் செய்தி வெளியானது. அதில், "பயணிகளின் கோரிக்கையை ஏற்று, மேட்டுப்பாளையம்- கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்களை இயக்குவது தொடர்பாகப் பரிசீலித்து வருகிறோம். உரிய அனுமதிக்குப் பிறகு அந்த ரயில்கள் இயக்கப்படும்" என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பயணிகள் சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "மேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் சிறப்பு ரயில் (எண்: 06009) மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20 மணிக்குப் புறப்பட்டு, காலை 9.05 மணிக்குக் கோவை ரயில் நிலையம் வந்தடையும்.

அதேபோல, கோவை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (எண்: 06010), கோவையில் இருந்து மாலை 5.55 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். வரும் மார்ச் 15-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இந்த ரயில்கள் இயக்கப்படும்.

இந்த ரயில்களில் பயணிக்க, எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாப் பெட்டியில் பயணிக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். பயணிகள் ரயிலைவிட இந்த கட்டணம் சற்றுக் கூடுதலாக இருக்கும்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT