கோப்புப் படம்
சென்னை: பதிவுத்துறை அலுவலகம் சார்பில் அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பொது அதிகார ஆவணத்தின் (Power of Attorney) அடிப்படையில் முகவர் மூலம் சொத்துகளைப் பதிவு செய்யும்போது, அதிகாரம் அளித்தவர் உயிருடன்தான் உள்ளார் என்பதற்கான சான்று(Life Certificate) தாக்கல் செய்வது கட்டாயம். இந்த சான்று ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் தேதிக்கு அதிகபட்சம் 30 நாட்களுக்கு முன்பாக பெற்றிருக்க வேண்டும் என்பது இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது.
ஆனால், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அங்குள்ள இந்திய தூதரகம் அல்லது நோட்டரி வழக்கறிஞரிடம் நேரம் ஒதுக்கி இந்த சான்றைப் பெற்று, அதை தபால் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்குள் 30 நாட்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இதனால் ஆவணங்களைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதையேற்று சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி வெளிநாட்டில் இருந்து எழுதிக் கொடுக்கப்பட்ட பொது அதிகாரத்தை பயன்படுத்திப் பதிவுக்குத் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களுக்கு மட்டும் இந்தச் சலுகை பொருந்தும். இத்தகைய ஆவணங்களுக்கு, பொது அதிகாரம் வழங்கியவர் உயிருடன் உள்ளார் என்பதற்கான சான்று, ஆவணம் எழுதிக் கொடுக்கப்பட்ட தேதிக்கு முன் 60 நாட்களுக்குள் வழங்கப்பட்டிருந்தால் போதுமானது.
இந்த சலுகை உள்ளூரில் வழங்கப்படும் மற்ற அதிகார ஆவணங்களுக்கு இது பொருந்தாது. இந்த புதிய அறிவுறுத்தல்களை எவ்வித தவறுமின்றி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். தணிக்கையின் போது மாவட்டப் பதிவாளர்கள் இதை சரியாகக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.