

சென்னை: அரசியல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்வர் விஜய் போலவே நேரடியாக 2031 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துள்ளார். இந்த அரசியல் மாற்றதால், தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக மாறி, மாறி கோலோச்சிய திமுக, அதிமுகவின் செல்வாக்கு குறைந்துள்ளது.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி ஆட்சியை பிடித்த பிறகு, நடிகர்கள் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் அரசியல் கட்சியை தொடங்கினர். ஆனால், அவர்களால் எம்ஜிஆரை போல் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.
அதேநேரத்தில், விஜய் தவெகவை தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து முதல்வராகி விட்டதால், மற்ற நடிகர்களும் அரசியலில் களம் இறங்க தயாராகி வருகின்றனர். இதில் நடிகர் தனுஷ் புதிய இயக்கம் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்காக பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். நடிகர் தனுஷை தொடர்ந்து சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களுடைய ரசிகர்கள் சந்திப்பை நடத்தியுள்ளனர். மற்ற நடிகர்களை விட, தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ள தனுஷ், அதற்கான அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில் “தமிழக எழுச்சிக் கழகம்” என்ற பெயரிலான கட்சியை தேர்தல் ஆணையத்தில் தனுஷ் தரப்பு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுபற்றி தனுஷ் தரப்பில் கேட்ட போது, “அரசியல் கட்சி தொடங்கப்போவது உறுதி. ஆனால், இன்னும் கட்சி பெயர் எல்லாம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதுவரை ரசிகர்கள் பொருமையாக காத்திருக்க வேண்டும்” என்றனர்.
தனுஷ் கட்சி தொடங்குவது தொடர்பாக சினிமா வட்டாரத்தில் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். ஆனால், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கினார். ஆனால், விஜய் கட்சி தொடங்கி அனைத்து எதிர்ப்புகளையும், இருபெரும் கட்சிகளான திமுக - அதிமுகவையும் சமாளித்து, ஏன் கரூர் சம்பவத்தில் இருந்தும் மீண்டெழுந்து மாபெரும் வெற்றி பெற்று அரசியல் களத்தையே மாற்றியுள்ளார்.
விஜய்யின் அபார வெற்றியை பார்த்த, ரஜினி தரப்பினர் மற்றும் அவரது ரசிகர்கள் நல்வாய்ப்பை தவறவிட்டு விட்டோமே என்று ஆதங்கத்தில் உள்ளனர். அந்த ஆதங்கத்தை போக்கும் விதமாகவே, ரஜினியின் மருமகனாக இருந்த நடிகர் தனுஷ் அரசியல் களம் காண உள்ளார்.
ரஜினியின் பக்கபலத்தோடு தீவிர அரசியலில் ஈடுபடவுள்ள தனுஷ், விஜய் போலவே கட்சி தொடங்கி, வரும் உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக 2031-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ரஜினிக்கும், விஜய்க்கும் இடையிலான சினிமா போட்டி என்பது ஒரு விதமான மோதல் போக்கு போல் மாறியது. இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்ய தொடங்கினர். தேர்தலில் விஜய் வெற்றி பெற்ற உடனே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, ரஜினி நேரில் சந்தித்து பேசியது விமர்சனத்துக்குள்ளனது. இதனை தொடர்ந்து, அந்த சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம் அளித்தார். ஆனாலும், இருதரப்பினர் இடையே சமூக வலைதளங்களில் மோதல் போக்கு தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.
சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்வர் விஜய்யை, அவரது இல்லத்திலும், தலைமைச் செயலகத்திலும் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சிலம்பரசன் உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், இதுவரை ரஜினி, தனுஷ் ஆகியோர் விஜய்யை சந்திக்கவில்லை. ஏற்கனவே சினிமா மற்றும் அரசியலில் விஜய்யுடன் உள்ள மோதல் போக்கு, தற்போது புதிதாக அரசியல் கட்சி தொடக்கம் போன்றவைகளால் இருவரும் முதல்வர் விஜய்யை நேரில் சந்திப்பதை தவிர்த்து இருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.