புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு வழித் தடங்களில் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரி்வித்துள்ளது.
இது குறித்து, மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகாரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் பிப்.20 முதல் ஏப்.5 வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், முக்கிய வழித் தடங்களில் ரயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க தென்னக ரயில்வே கோரியுள்ளது.
இதையடுத்து, மாநகர் போக்கு வரத்துகழகம் பிப்.20ம் தேதி முதல் ஏப்.5ம் தேதி வரை ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையம், கிண்டி, தாம்பரம் வழியாக 75 பேருந்துகளும், கிண்டி, தாம்பரம் வழியாக 43 பேருந்துகள், தாம்பரம் - கூடுவாஞ்சேரி வழி-யாக 64 பேருந்துகளும், கடற்கரை ரயில் நிலையம், பூங்கா ரயில் நிலையம், எழும்பூர் வழியாக 121 பேருந்துகள், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வழியாக 55 பேருந்துகள், பரங்கி மலை ரயில் நிலையம் வழியாக 20 பேருந்துகளும் வழக்கமாக இயக்கப் படுகிறது.
மேலும், கூடுதலாக ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 27 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள், எழும்பூர் ரயில் நிலையம் முதல் தலைமைச் செயலகம் வழியாக 8 பேருந்துகளும், நுங்கம்பாக்கம் வழியாக 5 பேருந்துகள், பரங்கி மலை ரயில் நிலையம் வழியாக 5 பேருந்துகள் என மொத்தம் 60 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவும் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.