நெல்லை, பொதிகை உள்பட 6 விரைவு ரயில்களின் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சில ரயில்கள் நாளை (6-ம் தேதி) வரை எழும்பூருக்கு பதிலாக, தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. தற்போது இந்த மாற்றம் வரும் 22-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி - சென்னை எழும்பூர் நெல்லை விரைவு ரயில், தாம்பரம் வரை மட்டும் இயக் கப்படும். தாம்பரத்தை காலை 6.25 மணிக்கு வந்தடையும். இந்த மாற்றம் நாளை முதல் 21-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இதுபோல, ராமேசுவரம்- சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16752), தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும். ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் விரைவு ரயில், சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரயிலின் மாற்றம் ஏப்.5ம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரை அமலில் இருக்கும்.
சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில், நாளை மறுநாள் (7-ம் தேதி) முதல் வரும் 22-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து தினசரி இரவு 8.05 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூர் - ராமேசுவரம் விரைவு ரயில் (16751), நாளை மறுதினம் (7-ம் தேதி) முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து இரவு 9.05 மணிக்கு இயக்கப்படும்.
தாம்பரம் - ஐதராபாத் விரைவு ரயில் (12759). சென்னை கடற்கரையில் இருந்து நாளை முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை புறப்பட்டு செல்லும்.