முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்த திருச்சி சிவா. (அடுத்த படம்) அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் மனுத் தாக்கல் செய்த தம்பிதுரை.படங்கள்: எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

மாநிலங்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் 6 பேர் வேட்புமனு தாக்கல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 6 பேரும் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். சுயேச்சைகள் உள்ளிட்ட மற்ற வேட்பாளர்களின் மனுக்கள் போதிய முன்மொழிவு இல்லாமல் நிராகரிக்கப்படும் என்பதால், இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

தமிழகத்தில் திமுகவின் திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், அதிமுகவின் தம்பிதுரை, தமாகாவின் ஜி.கே.வாசன் ஆகிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் ஏப்ரலில்முடிவடைகிறது. இதேபோல, நாடு முழுவதும் மொத்தம் 10 மாநிலங்களில் 37 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

          

தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த பிப்.26-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனு தாக்கலுக்கான அவகாசம் மார்ச் 5-ம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் 4-ம் தேதி வரை 3 சுயேச்சை வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர். நேற்று ஒரு சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சார்பில் 4 பேரையும், அதிமுக சார்பில் 2 பேரையும் வேட்பாளர்களாக நிறுத்த முடியும். அந்த வகையில், திமுக வேட்பாளர்களாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகிய இருவரும் கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ், அன்புமணி

திமுகவுக்கான மற்ற 2 இடங்கள் கூட்டணிக் கட்சிகளான தேமுதிகவுக்கும், காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளருமான கிறிஸ்டோபர் திலக்கும், தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷும் போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

அதேபோல, அதிமுக வேட்பாளராக தம்பிதுரையும், கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 6 பேரும் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

முதல்வர் ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக்,சுதீஷ் ஆகிய 4 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள்அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி,பாமக எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் முன்னிலையில் தம்பிதுரை, அன்புமணி ஆகிய இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

ராமதாஸ் பரிந்துரையில்.. மனுதாக்கல் நிறைவடையும் நேரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் பரிந்துரையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என ப.சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி இரா.சாந்தி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பி.தேன்மொழி ஆகியோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 9-ம் தேதி ஆகும். மார்ச் 16-ம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்சிகள் சார்பில் 7 பேர், சுயேச்சைகள் 4 பேர் என மொத்தம் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ராமதாஸ் பரிந்துரைத்த சுவாமிநாதன் மற்றும் 4 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வாய்ப்பு இல்லை என்பதால் இவர்களது மனுக்கள் நிராகரிக்கப்படும்.

போட்டியின்றி தேர்வாகின்றனர்: அந்த வகையில், 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு 6 பேரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்படும் சூழலில், 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். தேர்தல் நடைமுறைகள் மார்ச் 20-ம் தேதி நிறைவடைகின்றன. மனுதாக்கல் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ‘‘நான் மாணவப் பருவத்தில் இருந்தே எம்ஜிஆர் விசுவாசி. 1972-ல் அதிமுக தொடங்கியது முதல் உறுப்பினராக இருந்து பணியாற்றியவன். மிக இளம் வயதிலேயே எனக்குபொறுப்பு வழங்கியவர் எம்ஜிஆர். எனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த பழனிசாமிக்கு நன்றி’’ என்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் பேசும்போது, ‘‘ராகுல் காந்தி கடந்த 2008-ல் இளைஞர் காங்கிரஸில் புது ரத்தம் பாய்ச்சினார். அப்போது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அப்படி வாய்ப்பை பெற்ற நான், பல்வேறு மாநிலங்களில் கட்சிக்காக பணியாற்றி இருக்கிறேன். ஒரு அடிமட்ட தொண்டனுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ராகுல் காந்தி மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி’’ என்றார்.

SCROLL FOR NEXT