உத்தமர்கோவிலில் திருச்சி-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்ட சிந்துஜாவின் உறவினர்கள். (உள்படம்) சிந்துஜா
திருச்சி: மண்ணச்சநல்லூர் தொகுதியில் பரிசுப் பொருள் தராததை கண்டித்த பெண்ணை திமுகவினர் ஆபாசமாக பேசி தாக்கியதாகவும் இதனால் மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து திமுக கிளைச் செயலாளர் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் தொகுதியில் தாளக்குடி ஊராட்சிக்குட்பட்ட வாழக்கட்டை பகுதியில் திமுக வேட்பாளர் கதிரவனுக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் சிலர், வாக்காளர்களுக்கு நேற்று முன்தினம் எவர்சில்வர் பாத்திரங்களை பரிசாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்த் மனைவி சிந்துஜா (25) என்பவர் தனக்கும் பரிசுப் பொருள் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தகராறு முற்றி அந்தப் இளம் பெண்ணை பரிசுப் பொருட்கள் விநியோகித்த திமுகவினர் சிலர் ஆபாசமாக திட்டி, தாக்கியதாகக்கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த அப்பெண் நடந்த விவரங்களை அன்று இரவு கணவர் பிரசாந்திடம் கூறி உள்ளார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சிந்துஜா, வீட்டை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு சேலையால் தூக்குப் போட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், வீட்டின்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று,மனைவியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார்.
இதனிடையே, அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிந்துஜாவின் உறவினர்கள், திருச்சி-சேலம் சாலையில் உத்தமர் கோவில் மேம்பாலத்தில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர். பின்னர் அவர்கள் கொள்ளிடம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதுதொடர்பாக சிந்துஜாவின் தாயார் இளையராணி அளித்த புகாரின்பேரில், தற்கொலைக்குதூண்டியது, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராஜா, திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன், ரவிக்குமார், ராஜா மனைவி புஷ்பம், ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி, ராஜ்குமாரின் தாய் அங்குமணி ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகிகள் சுரேஷ்குமார், ராஜ்குமார், ரவி மனைவிகார்த்திகா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். உயிரிழந்த சிந்துஜாவின் தாயாரை அதிமுக திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி சந்தித்து ஆறுதல் கூறினார்.
தற்கொலை விவகாரத்தில் தலைவர்கள் கண்டனம்
சென்னை: மணச்சநல்லூர் தொகுதியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திமுகவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: திமுகவினர் ஆபாசமாகப் பேசி தாக்கியதில் மனமுடைந்த பட்டியலினப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
தேர்தல் நேரத்தில் விதிமுறைகளை மீறி, கூப்பன் போன்றவற்றைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதே மிகத் தவறானது. இதில் அதைக் கொடுக்கும் அகங்காரத்தில், பெண்களை இழிவுபடுத்தி தற்கொலை வரை தூண்டியிருப்பது மிகவும் கொடூரமானது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: சட்டவிரோதமாகப் பரிசுப் பொருட்களை விநியோகம் செய்ததோடு, பெண் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசி அவரை தற்கொலை செய்யத் தூண்டிய திமுக வேட்பாளர் கதிரவனின் செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது.
பாமக தலைவர் அன்புமணி: சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடையப்போவது உறுதி என்பதை அறிந்து கொண்ட திமுக, மோசடி செய்தாவது ஆட்சியைத் தக்கவைக்க துடித்துக் கொண்டிருக்கிறது.
திருச்சியில் பட்டியலின பெண்ணை திட்டியும், தாக்கியும் தற்கொலை செய்து கொள்ள வைத்திருக்கிறது திமுக. கொடிய பாம்பைவிட திமுக மிகவும் தீமையானது என்பதற்கு இதுவே சான்று.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
தவெக தலைவர் விஜய்: திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார். இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.