சென்னை: தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வாழும் தகுதியான 10 ஆயிரம் பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.57 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பால் உற்பத்தியை அதிகரிக்கவும் ஊரகப் பகுதி பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யவும் ஆண்டுதோறும் 10 ஆயிரம் தகுதிவாய்ந்த பெண்களுக்குக் கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று அமைச்சர் நெ.மரியவில்சன் கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதற்காக ரூ.57 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது சிறப்பான உற்பத்தித் திறன் கொண்ட பால் சொத்துகளை உருவாக்குவதன் மூலம் ஊரகப்பெண்களின் வாழ்வாதாரம், வருமானத்தை மேம்படுத்தும்.
இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொருபயனாளிக்கும் குறைந்தபட்சம் தினமும் 8 லிட்டர் பால் கறக்கும் திறனுள்ள ஆரோக்கியமான, அதிக பால் தரும் கலப்பின கறவை மாடு வழங்கப்படும். இதன்மூலம் பயனாளி குடும்பத்துக்கு வழக்கமான வருமான ஆதாரம் உறுதி செய்யப்படும்.
முறையான கால்நடை பராமரிப்பு மற்றும் அறிவியல் மேலாண்மை மூலம், 5 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு மாடும் 3 முதல் 4 கன்றுகளை ஈனும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது நீண்ட காலச் சொத்து உருவாக்கத்துக்கும் நிலையான பொருளாதார நன்மைகளுக்கும் வழிவகுக்கும்.