மக்கள் நீதி மய்யம் தொடங்கி மூன்றாவது ஆண்டு தொடங்கியதை முன்னிட்டு, வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்த கமல்ஹாசன், கடந்த 2018 ஆம் ஆண்டு, பிப்.21-ம் தேதி, மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம், 3.72 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. நகர்ப்புறங்களில் சில தொகுதிகளில் பிரதான கட்சிகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது.
இருப்பினும், கிராமப்புறங்களில் எதிர்பார்த்த அளவு வாக்குகளைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் என எந்தத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அடுத்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை.
இந்நிலையில், இன்று, மக்கள் நீதி மய்யம் 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (பிப்.21) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பல கேள்விகள், சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்தப் பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை, முழு பலம், என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள்தான். வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியைச் சொல்லில் இன்றி, தமிழகத்தைப் புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்" எனப் பதிவிட்டுள்ளார்.
தவறவிடாதீர்