

திரைப்பட தொழிலாளர்களின் இழப்பீட்டுக் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய இன்சூரன்ஸ் குறித்து சென்னையைச் சேர்ந்த நேஷனல் இன்சூரன்ஸ், எல்.ஐ.சி ஏஜெண்ட்எம்.பிரேம் குமார் கூறியதாவது:
ஒரு இடத்தில் 10-க்கும் மேலான தொழிலாளர்கள் கூடி வேலை பார்க்கும்போது அவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் இழப்பீட்டுக் கொள்கை (workmen compensation policy) திட்டத்தின் அடிப்படையில் இன்சூரன்ஸ் செய்துகொள்ள வேண்டும். இது சினிமாத் துறையினருக்கும் பொருந்தும். அவர்களுக்கு ஃபிலிம் இன்சூரன்ஸ் என்ற ஒரு பிரிவே உள்ளது.
ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்குவதற்கு முன்பு இந்த பாலிஸி விஷயங்களை செய்துகொள்ள வேண்டும். ஆனால், பெரும்திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களேஇதுபோன்ற பாலிசி விஷயங்களைஅமல்படுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் படப்பிடிப்பு நடந்து முடியும் வரையிலும் அல்லது பல்வேறு இடங்களில் நடக்கும்போதும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு என பாலிஸி திட்டங்கள் உள்ளன.
வயது, தொழில் அடிப்படையில் தொழிலாளர்கள் இன்சூரன்ஸ் செய்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு முறையே இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் நபர் ஒருவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் வரைக்கும் இழப்பீடு கொடுக்க வாய்ப்புகள் உண்டு.
அதேபோல, படப்பிடிப்பு எந்த பகுதியில் நடக்கிறதோ அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உட்பட்டு தொழிலாளர் நலத் துறை அலுவலகம் இயங்கும். படக்குழு சார்பில் அவர்களிடம் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான சான்றிதழ் பெற்றே படப்பிடிப்பு நடந்தப்பட வேண்டும்.
இவற்றை பலரும் கடைபிடிப்பதில்லை என்பதுதான் வேதனையான ஒன்று என்றார்.
இந்த கோர விபத்து தொடர்பாக சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் சவுந்தர ராஜன் கூறும்போது, “அனைத்து தொழிற்சாலை அமைப்புகளும் கடைசி இடத்தில் வைப்பது பணி செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பு ஒன்றைத்தான். முதலில் லாபம்தான் முக்கிய இடம் வகிக்கிறது. இதற்கு சினிமாத் துறையும் விதிவிலக்கல்ல. பல தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால்தான் நம் நிறுவனத்துக்கு லாபம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.
பல கோடிகளில் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்புக் குழு, அது சார்ந்த தொழிலாளர்கள் அமைப்பு ஏன் பணியாளர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. இதற்கெல்லாம் ஒரே காரணம்,தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு என்றால் நிறுவனத்துக்கு செலவாகும் என்றே கருதுகின்றனர். இதுபோன்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றார்.
திரைக்கலைஞர்களின் பாதுகாப்பு
இதுதொடர்பாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் கேட்டபோது, “பெப்சி அமைப்பில் பல்வேறு துணை அமைப்புகள் இருப்பதால் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளிடமும் முறையே ஆலோசனை செய்தபிறகுதான் பதில் அளிக்க முடியும். தொழிலாளர்களின் பாதிப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. இது தொடர்பாக பெப்சி அமைப்பு இன்று காலை ஊடகங்களை சந்தித்து பேச உள்ளது’’ என்றார்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த மூன்று சகோதர்கள் குடும்பத்தினருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். வருங்காலத்தில் தயாரிப்பு பணிகள் நடைபெறும்போது பங்குபெறும் திரைப்பட கலைஞர்களின் பாதுகாப்புக்கு சரியான தற்காப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.