வழக்கறிஞர்கள் புறக்கணிப்புப் போராட்டம் | படம்: எம்.சாம்ராஜ். 
தமிழகம்

கறுப்பு தினத்தை அனுசரித்த புதுச்சேரி வழக்கறிஞர்கள்: 13 நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிப்பு

செ.ஞானபிரகாஷ்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதை கறுப்பு தினமாக அனுசரித்த புதுச்சேரி வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர். இதனால் நீதிமன்றப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்துவேல் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பணிகளைப் புறக்கணித்து இன்று (பிப்.19) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறும்போது, "கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்கியது. இந்த தினத்தை கறுப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகிறோம். அதன்படி இன்று புதுச்சேரி வழக்கறிஞர்கள் அனைவரும் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். நடைபெற்று வரும் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தனர்.

புதுச்சேரியில் உள்ள 13 நீதிமன்றங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்தார்கள். வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதே போன்று காரைக்கால் மாவட்டத்திலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT