

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் நிரம்பி வழிகின்றன என்று ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் தெரிவித்தார்.
காஷ்மீரில் செயல்படும் ராணுவத்தின் 15-வது படைப்பிரிவின் தலைமை பொறுப்பை கே.ஜே.எஸ். தில்லான் வகிக்கிறார். விரைவில் அவர் டெல்லியில் உள்ள ராணுவத் தலைமையகப் பணிக்கு திரும்புகிறார்.
இந்நிலையில் அவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறும்போது, “இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவ 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் உதவி வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் மற்றும் ஏவப்படும் இடங்கள் அனைத்தும் தற்போது நிரம்பி வழிகின்றன.
காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இதற்காக எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு தக்க வகையில் பதிலடி கொடுத்து வருகிறோம். பாகிஸ்தான் தனது முயற்சியில் வெற்றிபெற முடியாது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்களின் ஒத்துழைப்புடன் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.