தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வர் பழனிசாமி என்றென்றும் போற்றப்படுவார் என, நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கு உரிய சட்டம் இயற்றப்படும் என, முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த அறிவிப்புக்காக, சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் நெடுவாசல் போராட்டக் குழுவினர் முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய, நெடுவாசல் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வேலு, "நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் அமல்படுத்தப்படாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்து, எங்கள் பகுதி விவசாயிகளைக் காப்பாற்றியது. காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற சட்டம் இயற்றப்படும் என முதல்வர் அறிவித்தது வரலாற்றில் இடம் பெறத்தக்க பெரும் நிகழ்வு. அதற்கு நன்றி சொல்வதற்காக முதல்வரைச் சந்தித்தோம். நெடுவாசலைச் சுற்றியுள்ள 30 கிராமங்களின் பிரதிநிதிகள் இங்கு வந்திருக்கிறோம்.
முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தோம். தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதல்வர் எங்களிடம் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என அறிவித்துள்ளது தமிழக மக்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு, எண்ணி எண்ணி மகிழத்தக்கது. இதற்காக, முதல்வர் பழனிசாமி தமிழக அரசியல் வரலாற்றில் என்றென்றும் போற்றப்படுவார் என நன்றிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு காவிரி உபரி நீரைத் திருப்பும் கோரிக்கையை அமைச்சர் விஜயபாஸ்கர் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். காவிரி உபரி நீரைத் திருப்புவதற்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்க உள்ளதாக முதல்வர் மகிழ்ச்சியான செய்தியை எங்களிடத்தில் சொன்னார்"
இவ்வாறு வேலு தெரிவித்தார்.
தவறவிடாதீர்!