ரஜினி - சீமான்: கோப்புப்படம் 
தமிழகம்

விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகரின் வீட்டில் ஏன் ஐடி ரெய்டு இல்லை? - சீமான் கேள்வி

செய்திப்பிரிவு

நடிகர் விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகரின் வீட்டில் வருமான வரித்துறையினர் ஏன் சோதனை நடத்தவில்லை என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் முதல்வரை சீமான் இன்று (பிப்.6) நேரில் சந்தித்தார்.

பின்னர், சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் முன்வைத்தோம். அதனைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

தஞ்சை மாவட்டத்தை ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறோம். அதையும் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்" என்றார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளதே?

விஜய்யை விட அதிக சம்பளம் வாங்குபவர் யார் என உங்களுக்குத் தெரியும். ஒரு படத்திற்கு மட்டும், ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.126 கோடியை ஒருவர் சம்பளமாக வாங்கியிருக்கிறார். அடுத்த படத்துக்கும் வாங்கியுள்ளார். அவர் வீட்டுக்கு ஏன் வருமான வரித்துறையினர் செல்லவில்லை? 66 லட்சம் வரி பாக்கி கட்ட வேண்டும். அதையும் தேவையில்லை என்று சொல்லி விட்டனர்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்றால் முதலில் குரல் கொடுப்பேன் என்றார். ஆசீபாவை பாலியல் வன்கொடுமை செய்த போது, எங்கு குரல் கொடுத்தார்? மாட்டுக்கறியை வைத்திருந்ததற்கு கொலை செய்தபோது குரல் கொடுத்தாரா? ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கொலை செய்தபோது குரல் கொடுத்தாரா?

விஜய்யை இதன் மூலம் மிரட்டி அச்சப்படுத்த நினைக்கின்றனர். இவர் நல்லவர், அவர் கெட்டவர் என்று நினைக்க வைக்கின்றனர். வரி பாக்கி வைத்திருந்தவர், 3 ஆண்டுகள் எனக்குப் படவாய்ப்பில்லை என்றார். அவர் ஓய்வுக்காக நடிக்காமல் இருந்தாரா? பணத்தை வட்டிக்கு விட்டதாகத் தெரிவித்திருக்கிறார். 18% என்பது அநியாய வட்டியில்லையா?

எனக்குத் தெரிந்து அன்புச்செழியன் இப்போது திரைப்படம் எடுக்க வட்டிக்குப் பணம் கொடுப்பதில்லை. நான் எடுக்கும் படத்திற்கு பணம் தரக் கேட்டேன். மறுத்து விட்டார்.

நடிகர் விஜய்க்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. அவருக்கு இளைஞர்கள், மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. அவரை அச்சப்படுத்த நினைக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் இறக்கிவிடும் ஆளுக்கு விஜய் போட்டியாக வந்து விடக்கூடாது என நினைக்கின்றனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என ரஜினி கூறியிருக்கிறாரே?

அவர் சொன்னால் சரியாகத்தானே இருக்கும். நாம் நம்பித்தான் ஆக வேண்டும். இது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல, மனித குலத்திற்கே எதிரானது. காடுகளில் வாழும் பழங்குடியினர் என்ன ஆவணங்களை வைத்திருப்பார்கள்? நாடு முழுவதும் உள்ள பிச்சைக்காரர்கள், சந்நியாசிகளிடம் ஆவணங்கள் எப்படி இருக்கும்?

ரபேல் ஆவணங்களை உச்ச நீதிமன்றம் கேட்டபோது, மத்திய அரசு கொடுத்த பதில் மனு நினைவிருக்கிறதா? பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்து கோப்புகள் திருடப்பட்டு விட்டதாக மத்திய அரசு சொன்னது. இத்தனை கோடி மக்களிடம் ஆவணங்களை வாங்கி, எங்கு பாதுகாப்பாக வைப்பார்கள்?

எனக்கு 2 பிறந்த தேதிகள் உள்ளன. நவ.8, டிச.15. பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது ஒரு தேதி. ஜாதகத்தில் ஒரு தேதி இருக்கிறது. இதில் எதனை நம்புவீர்கள்? பாரதிராஜாவுக்குப் பிறந்த தேதியே தெரியாது. இரண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். நாங்கள் என்ன சான்றிதழைத் தருவது?

படித்ததற்கே சான்றிதழ் காட்டாத அவர்கள், குடியுரிமைக்காக ஆவணங்கள் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது.

கையெழுத்து இயக்கத்தால் தர்மம் வெல்லும் என ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து?

எனக்குச் சிரிப்பதைத் தவிர வேறு பதில் இல்லை.

பழங்குடியினச் சிறுவனை தன் காலணியைக் கழற்ற வைத்துள்ளதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளாரே?

அந்தச் செயலைப் பார்த்ததும் எனக்குக் கோபம் வந்தது. அந்தத் தம்பி எதிர்வினை ஆற்றியிருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன். கூட வந்தவர்களைச் செய்யச் சொல்லியிருக்கலாம். இது, பழங்குடியினச் சிறுவனை அவமதித்ததாகத்தான் நான் பார்க்கிறேன்.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT