முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் புத்துணர்வு முகாமைத் தொடங்கி வைக்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பழங்குடியினச் சிறுவனை அழைத்து, தனது காலணியை மாவட்ட ஆட்சியர், வனத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் கழற்றி விடச் சொன்னதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் புத்துணர்வு முகாம் இன்று (பிப்.6) தொடங்கியது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முகாமைத் தொடங்கி வைக்க முதுமலை வந்தார். முகாம் தொடங்கி வைக்கும் முன்னர் அங்குள்ள கோயிலில் பூஜைக்கு அழைக்கப்பட்டார்.
கோயிலுக்குள் செல்வதற்காக காலணியைக் கழற்ற முனைந்தார். அப்போது, அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பழங்குடியினச் சிறுவனை அழைத்தார். ஏதாவது கேட்க அழைக்கிறார் எனத் தயங்கிய சிறுவனை, தனது காலணியைக் கழற்றி விடச் சொன்னார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது நின்றிருந்தனர். இதைப் பார்த்த குன்னூர் எம்எல்ஏ சாந்தி ராமு, பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்து விடாதபடி மறைத்து நின்றுகொண்டார்.
வனத்துறை அமைச்சரின் இந்தச் செயல் அங்கிருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், அடுத்த தேர்தலில் பாமக ஆட்சி அமைக்கும் என ராமதாஸ் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அவங்க கட்சியினரை குஷிப்படுத்தச் சொல்லியிருப்பார்" என்றார்.
தவறவிடாதீர்