Last Updated : 06 Feb, 2020 08:50 AM

 

Published : 06 Feb 2020 08:50 AM
Last Updated : 06 Feb 2020 08:50 AM

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்: தமிழ், சம்ஸ்கிருதத்தில் மந்திரங்கள் முழங்கின

தஞ்சாவூர் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும் என இந்து அமைப்புகள், பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் கோயிலின் கேரளாந்தகன் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில், மராட்டா நுழைவு வாயில் ஆகியவற்றில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற திருப்பணி கடந்த டிசம்பரில் நிறைவடைந்தது.

இதையடுத்து, கடந்த டிச.2-ம் தேதி பிற சன்னதிகளுக்கான திருப்பணிகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. அதன்படி விநாயகர், சுப்பிரமணியர், கருவூரார், சண்டிகேஸ்வரர், நடராஜர், அம்மன், வராகி ஆகிய சன்னதிகளில் திருப்பணிகள் நடைபெற்றன.

தொடர்ந்து, மூலவர் பெருவுடையார் விமானத்தில் உள்ள தங்கக் கலசம் கீழே இறக்கப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் ஜன.30-ம் தேதி விமானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதேபோன்று பழைய கொடிமரமும் மாற்றப்பட்டு புதிய கொடிமரம் நிறுவப்பட்டது.

குடமுழுக்கு விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் ஜன.27-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதி வெண்ணாற்றிலிருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதையடுத்து, பிப்.1-ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கிய நிலையில், நேற்று காலை வரை 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

குடமுழுக்கு தினமான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 8-ம் கால யாக பூஜைகள் முடிவுற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. காலை 7.20 மணிக்கு யாகசாலை கூடத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள், கைலாய வாத்திய இசைக் கருவிகள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டன.

முதலில் விநாயகர் சன்னதிக்கு கடம் புறப்பட்டுச் சென்ற பின்னர் தொடர்ந்து, 27 சன்னதிகள் மற்றும் கோபுரங்களுக்கு புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்றனர்.

தமிழ், சம்ஸ்கிருதத்தில்...

இதில் குறிப்பாக 216 அடி உயரமுள்ள பெருவுடையார் விமானக் கலசத்தில் ஊற்றுவதற்கான புனித நீர் கலசத்துடன் 5 சிவாச்சாரியார்கள், 2 ஓதுவார்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் 8 நிமிடங்களில் உச்சிக்குச் சென்றனர். அங்கு ஓதுவார்கள் தமிழிலும் சிவாச்சாரியார்கள் சம்ஸ்கிருதத்திலும் மந்திரங்களை உச்சரித் தனர்.

சரியாக காலை 9.23 மணிக்கு பெருவுடையார் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து சன்னதிகள் மற்றும் கோபுரங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. புனித நீர் ஊற்றப்பட்ட பிறகு கோபுர கலசங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

குடமுழுக்கு விழாவுக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் தரிசனம் செய்தபின்னர்,

பக்தர்கள் பெருவுடையாரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, நேற்றிரவு 10 மணி வரை பெருவுடையாரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கட்டுக்கடங்காத கூட்டம்

பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி கோயிலின் திருச்சுற்று மாளிகையில் நேற்று முன்தினம் இரவே வந்து தங்கியிருந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணி முதல் பக்தர்கள் திரளாக வந்தவண்ணம் இருந்தனர்.

பொது தரிசனத்துக்காக கோயிலின் தென்புறத்தில் 7 பிரிவுகளாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. கோயிலின் வெளிப் பிரகாரத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து குடமுழுக்கு விழாவை தரிசித்தனர்.

வெயிலையும் பொருட்படுத்தாமல்...

கோயிலுக்கு வெளியில் இருந்து பக்தர்கள் குடமுழுக்கு விழாவை தரிசிக்க வசதியாக சில மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டன. இதனால் சாலைகளில் நின்றிருந்த பக்தர்களும் குடமுழுக்கை எளிதாக தரிசித்தனர்.

குடமுழுக்கு விழாவைக் காண உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்திருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் வெயிலையும் பொருட் படுத்தாமல் சாலைகளில் காத்திருந்து, குடமுழுக்கு விழா நடைபெற்ற பின்னர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

குடமுழுக்கு விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே, குடமுழுக்கு விழாக்குழுத் தலைவர் துரை.திருஞானம், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, நடிகர் ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விவிஐபிக்கள் தரிசனம் செய்ய கோயிலின் வடக்குப் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

சிவகங்கை பூங்கா வழியாக அவர்கள் உள்ளே வந்து தரிசனம் செய்துவிட்டு, மேற்கு வாயில் வழியாக வெளியேறினர்.

23 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள நேற்று இரவு வரை 5 லட்சம் பக்தர்கள் திரண்டனர். இதனால் தஞ்சாவூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

‘தங்கக் கலசத்தின் மீது ஏறிய தமிழ்’

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட திரைப்பட நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தமிழ்க் கடவுளையும், தமிழையும் யாராலும் அழிக்க முடியாது. தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஒலித்துள்ளதால், பிரசித்தி பெற்ற மிகப்பெரிய விமானத்தின் தங்கக் கலசத்தில் தமிழ் ஏற்றப்பட்டு விட்டது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோல, தமிழகத்தில் இனி நடைபெறவுள்ள அனைத்து கோயில் குடமுழுக்கு விழாக்களிலும் தமிழை ஒலிக்கச் செய்ய வேண்டும்” என்றார்.

‘பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும்’

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறியபோது, “மண்ணும் விண்ணும் இருக்கும் வரை மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய இந்தப் பெரிய கோயில் நிலைத்திருக்கும். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த நிலையில், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து என்றென்றும் நிலைத்திருக்கும். தமிழக முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு இந்தக் குடமுழுக்கு விழாவுக்காக அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்துள்ளது. வந்து செல்லும் பல லட்சம் பக்தர்களும் தடையின்றித் தரிசனம் செய்துவிட்டு செல்லும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

‘கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டு’

குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியபோது, “66 மீட்டர் உயரமுள்ள கோயிலின் உச்சியில் 80 டன் எடையிலான கல்லை வைத்து மாமன்னன் ராஜராஜன் கட்டிய விமானம் நமது முன்னோர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழாவை தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். குடமுழுக்கு தொடர்பாக எழுப்பப்பட்ட சர்ச்சைகள் அனைத்தும், நாத்திகவாதிகள் அல்லது இந்து அல்லாத மற்ற மதத்தினரால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டவை” என்றார்.

குடும்பம் குடும்பமாக குவிந்த பக்தர்கள்

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேருந்துகள், ரயில்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர். நேற்று காலை புத்தாடை அணிந்து, குழந்தைகள், பெரியவர்கள், பெண்களுடன் குடும்பம் குடும்பமாக பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர். “பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தது எங்களுக்கு கிடைத்த புண்ணியம்” என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

மக்களின் கவனம் ஈர்த்த மோடி டீ கடை

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்கு உள்ளூர் மட்டுமில்லாது வெளியூர்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்காக பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் தஞ்சாவூர் மாநகரின் பல்வேறு இடங்களில் நீர்மோர், உணவுப் பொட்டலங்கள், குடிநீர் உள்ளிட்டவை விநியோகிக்கப்பட்டன. இதில், தஞ்சாவூர் ரயில் நிலையம் எதிரே பாஜக சார்பில் மோடி டீ கடை என்ற பெயரில் பிரமதர் மோடியின் உருவப்படம் கொண்ட பிளக்ஸ் போர்டுடன் கடைவைத்து மக்களுக்கு இலவசமாக டீ வழங்கப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

10 டன் எடையில் மலர் மாலைகள்

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கையொட்டி நாள்தோறும் 1,500 கிலோ எடையுள்ள செவ்வந்தி, ரோஜா, வாடாமல்லி, சம்பங்கி ஆகிய பூக்கள் ஸ்ரீரங்கம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய இடங்களிலிருந்து வரவழைக்கப்பட்டன. இந்தப் பூக்களை மாலைகளாகத் தொடுக்க தருமபுரம் ஆதீனத்திலிருந்து 75 பேர் வந்திருந்தனர். விமானத்தின் மேல் பகுதி முழுவதும் மலர் மாலைகளால் நேற்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல, கோயில் கோபுரத்தில் தலா 150 அடி நீளத்துக்கு இருபுறமும் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பெரியநாயகி அம்மன் கோயில் தாழ்வாரம், நந்தியம்பெருமான், மூலவர் சன்னதி உட்பட கோயிலில் பல இடங்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. மதுரை கஜானன் மகராஜ் பக்தர்கள் பேரவை சார்பில் தாமரை மொட்டுகள், மனோரஞ்சிதம், செந்தாமரை, வெண்தாமரை ஆகிய பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x