தமிழகம்

பெயர் சேர்க்க அளிக்கப்பட்ட அவகாசம் நிறைவு: பிப்.17-ல் இறுதி வாக்காளர் பட்டியல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதுவரை மொத்தம் 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். மேலும் 53.41 லட்சம் வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்காத நிலையில், அவர்களின் பெயர்கள் நீக்கப்படவாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை நடைபெற்றன. பின்னர் டிச.19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த அக்.27-ம் தேதி நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் வரைவு பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். இறந்த வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள், இரட்டை பதிவு என மொத்தம் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து டிச.19 முதல் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் சுமார் 13 லட்சம் பேர் மட்டுமே தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தனர். எஸ்ஐஆர் பணியில் இறந்ததாக நீக்கப்பட்ட 26 லட்சம் பேரில் ஒருசிலர் மட்டுமே தாங்கள் உயிருடன் இருக்கும் நிலையில் நீக்கியதாக ஆட்சேபம் தெரிவித்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தனர்.

அதே நேரத்தில் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66.44 லட்சம் பேர் அனைவரும் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால் 13 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 53.41 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. அதனால் ஏற்கெனவே இறந்தாக நீக்கப்பட்ட 26 லட்சம் பேர் மட்டுமல்லாது, மேலும் 53.60 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளாக எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கெனவே இறந்தாக நீக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து, அவர்களின் குடும்பத்தாரால் இறப்பை உறுதி செய்த பிறகு நீக்கப்பட்டனர்.

மேலும் நிரந்தரமாக குடியேறியவர் என நீக்கப்பட்டவர்கள், வெளி மாநிலத்துக்குச் சென்றிருக்கலாம், இரட்டை பதிவு வாக்காளராகவும் இருக்கலாம், இறந்தும் போய் இருக்கலாம். அவர்களை அணுக முடியாத நிலையில் அதை உறுதி செய்ய முடியவில்லை. இருப்பினும் வெளிப்படை தன்மையுடன், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 97.37 லட்சம் வாக்காளர்கள் எதற்காக நீக்கப்பட்டனர் என்ற விவரங்கள் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பட்டியல் வைக்கப்பட்டது. ஒருவேளை அது தவறாக இருந்தால் ஆட்சேபம் தெரிவிக்க 1 மாதம் அவகாசமும் வழங்கப்பட்டது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT