2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 4-வது வழித்தடத்தில் வடபழனி - கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. (கோப்புப் படம்)

 
தமிழகம்

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 52% பணிகள் நிறைவு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

மு.வேல்சங்கர்

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் ஒட்​டுமொத்​த​மாக, ஏப்​ரல் வரை 52.55 சதவீதம் மெட்ரோ பாதை அமைக்​கும் பணி​கள் நிறைவடைந்​துள்​ள​தாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சென்​னை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் ரூ.63,246 கோடி மதிப்​பில், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித் தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்​தடத்​தி​லும், கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்​தடத்​தி​லும், மாதவரம் - சோழிங்​கநல்​லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்​தடத்​தி​லும் பணி​கள் நடை​பெறுகின்​றன. மொத்​தம், 118 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமைக்க திட்​ட​மிட்​டு, பணி​கள் நடை​பெறுகின்​றன.

இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்​கப் பாதை​யில் 43 சுரங்க ரயில் நிலை​யங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன. மெட்ரோ ரயில் கட்​டு​மானப் பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்​பரில் தொடங்​கியது. சுரங்​கப் பாதை பணியை பொருத்​தவரை, மாதவரத்​தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்​டோபரில் தொடங்​கியது.

இதைத் தொடர்ந்​து, பசுமை வழிச்​சாலை, கலங்​கரை விளக்​கம், சேத்​துப்​பட்​டு, பனகல் பூங்கா உட்பட பல்​வேறு இடங்​களில் சுரங்​கப் பாதை பணி​கள் தொடங்​கின. பசுமைவழிச் சாலை - அடை​யாறு, சேத்​துப்​பட்டு - ஸ்டெர்​லிங் சாலை, அயனாவரம் - பெரம்​பூர், பனகல் பூங்கா - கோடம்​பாக்​கம் சுரங்​கப் பாதை பணி​கள் அடுத்​தடுத்து நிறைவடைந்​தன.

கலங்​கரை விளக்​கம் - மயி​லாப்​பூர், ராயப்​பேட்டை - ஆர்​.கே.​சாலை, பசுமைவழிச் சாலை - மந்​தைவெளி ஆகிய சுரங்​கப்​பாதை பணி​களும் நிறைவடைந்​துள்​ளன. இதுத​விர, பல்​வேறு இடங்​களில் சுரங்​கப் பாதை பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

இது​போல, உயர்​மட்​டப் பாதை பணி பொருத்​தவரை, 4-வது வழித்​தடத்​தில் பூந்​தமல்லி - போரூர்- வடபழனி தடத்​தில் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. அதே நேரத்​தில், போரூர் - வடபழனி இடையே மெட்ரோ ரயில் நிலைய கட்​டு​மானப் பணி​கள் நடை​பெறுகின்​றன.

வடபழனி - கோடம்​பாக்​கம் பவர்​ஹவுஸ் பாதை​யில் தற்​போது தண்​ட​வாளம் அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது. பல இடங்​களி​லும் உயர்​மட்​டப் பாதை பணி​களும் மும்​முர​மாக நடை​பெறுகின்​றன.

இந்​நிலை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் ஒட்​டுமொத்​த​மாக, 52.55 சதவீதம் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் முதல் மெட்ரோ ரயில் சேவை, 4-வது வழித்​தடத்​தில் பூந்​தமல்லி - போரூர்- வடபழனி தடத்​தில் விரை​வில் தொடங்​கும் என எதிர்​பார்க்​கிறோம்.

இதையடுத்​து, சென்னை வர்த்தக மையம் - போரூர் பணி​களை முடிக்க உள்​ளோம். போரூர்- கோயம்​பேடு ஆகிய உயர்​மட்​டப்​பாதை பணி​களும் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் உயர்​மட்ட பாதை, சுரங்​கப் பாதை சேர்த்து நடப்​பாண்​டில் ஏப்​ரல் மாதம் வரை ஒட்​டுமொத்​த​மாக 52.55 சதவீதம் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன.

குறிப்​பாக, 3-வது வழித் தடத்​தில் உயர்​மட்ட பாதைப் பணி​கள் 42.71 சதவீத​மும், சுரங்​கப் பாதை பணி​கள் 45.46 சதவீத​மும் நிறைவடைந்​துள்​ளன. 4-வது வழித் தடத்​தில் 60 சதவீதத்​துக்கு மேலாக​வும், 5-வது வழித்​தடங்​களில் 50 சதவீதத்​துக்கு மேலாக​வும் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. பல இடங்​களில் பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

சட்​டப்​பேரவை தேர்​தல் காரண​மாக, மேற்​கு​வங்​கம், அஸ்​ஸாம் உள்​ளிட்ட வட மாநில தொழிலா​ளர்​கள் 2 மாதங்​களாக சொந்த ஊருக்கு சென்று இருந்​தனர். தற்​போது, பெரும்​பாலான தொழிலா​ளர்​கள் திரும்பி வந்​துள்​ளனர்.

மீண்​டும் பணி​கள் தீவிரமடைந்​துள்​ளன. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், வரும் 2027-ல் அனைத்து உயர்​மட்​டப்​பாதை பணிகளும்​, 2028-ம்​ ஆண்​டுக்​குள்​ அனைத்​து சுரங்​கப்​பாதை பணிகளும்​ முடிக்​க இலக்​கு நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT