கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, குவளை. (உள்படம்) ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு.
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே 5,000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள், மட்கலக் குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதுகுளத்தூர் தாலுகாவில் வலசை மற்றும் மணக்குளம் ஆகிய ஊர்களுக்கு இடையேயுள்ள அய்யனார், தர்ம முனீஸ்வரர் கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவர் எடுக்க குழி தோண்டியபோது, முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன. இதுபற்றி பெருங்கருணையைச் சேர்ந்த மாரி, வேல்முருகன் ஆகியோர் அளித்த தகவலின்பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அங்கு சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: கோயில் சுற்றுச்சுவர் எடுக்கத் தோண்டியபோது வெளிப்பட்ட ஒரு தாழிக்குள் 3 குவளைகள், தட்டு, கிண்ணம், கும்பா, சிறிய பானை ஆகியவை இருந்துள்ளன. இவை கருப்பு சிவப்பு, சிவப்பு நிறமுடையன. முதுமக்கள் தாழிகள் வெளிவந்த பகுதியில் ஆய்வு செய்தபோது, உடைந்த சுடுமண் தாங்கிகள், மூடிகளில் குறியீடுகள் இருந்தன. பெருக்கல் குறி, தலைகீழ் சூலம், ஏணி ஆகிய குறியீடுகள் 3 சிவப்பு நிற ஓடுகளிலும், 7 கருப்பு சிவப்பு ஓடுகளிலும் உள்ளன.
இவை கி.மு.4000 முதல் கி.மு.1500 வரையிலான பெருங்கற்காலத்தின் தொடக்கத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டுவிடுவர். அதை நரி, கழுகு போன்றவை இரையாய் கொண்டபின் கிடக்கும் எலும்புகளை சேகரித்து, அவற்றுடன் அவர்கள் பயன்படுத்திய அல்லது படையல் பொருட்களை சிறிய முதுமக்கள் தாழியில் வைத்து மூடி அடக்கம் செய்துள்ளனர்.
பிற்காலத்தில் பெரிய தாழிக்குள் உடலை வைத்து அடக்கம் செய்யும் முறை இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாழிக்குள் இருந்த கருப்பு சிவப்பு மட்கலங்கள் அடர் வண்ணத்துடனும், வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் உள்ளன. இவற்றைச் சுடும்போது அதன் மேல் உப்பு தூவி பளபளப்பாக ஆக்கியுள்ளனர்.
மலைப் பகுதிகளில் காணப்படும் பெருங்கற்படைச் சின்னங்களை விட, சமவெளிப் பகுதிகளில் உள்ள சிறிய தாழிகள் காலத்தால் முந்தியவை என்பதால், இவை சுமார் 5000 ஆண்டுகள் பழமையானவை எனலாம்.