தமிழகம்

பெரம்பலூரில் டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதி 5 வயது சிறுமி உயிரிழப்பு: 9 பேர் காயம்

எஸ்.ஸ்டாலின்

பெரம்பலூர்: பெரம்பலூரில் டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதி 5 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள குயிலாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகள் குணஸ்ரீ (5). ராமு உள்பட குயிலாபாளையத்தைச் சேர்ந்த 17 பேர், ஈரோடு மாவட்டம் சிவகிரிக்கு கரும்பு வெட்டும் பணிக்காக சென்றிருந்தனர்.

இன்று அதிகாலை வேலை முடிந்து அனைவரும், டிராக்டரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கரூரில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கடலூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் மேம்பாலத்தில் டிராக்டர் வந்தபோது, கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து, டிராக்டரின் பின்னால் மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்ததில், ராமுவின் மகள் குணஸ்ரீ மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் டிராக்டரில் பயணம் செய்த குயிலப்பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகமுத்து மனைவி செங்கேணி (47) நாகமுத்து (57) நாகமுத்து மகள் நவீந்திரா (18) ராஜேந்திரன் மனைவி கல்யாணி (60) மணிபாலன் மகன் சிவனேசன் 24) பாலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சரஸ்வதி (42) இவரது மகள் தமிழ் இனியா (15) ரமேஷ் மகள் அனிதா (18) பாலையூரைச் சேர்ந்த தண்டபாணி மகன் ராமமூர்த்தி (41) உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீஸார், விரைந்து வந்து உயிரிழந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பாடாலூர் போலீஸார் அரசு விரைவுப் பேருந்து டிரைவரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தகுடியை சுரேஷ் குமார் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் அதிகாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்திற்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து சீரானது.

SCROLL FOR NEXT