

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி 2-ம் நாளன்றே இறுதிக் கட்டத்தை எட்டி பரபரப்பான நிலையில் உள்ளது. 254 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டி வரும் நியூஸிலாந்து அணி அட்கின்சனின் 2 விக்கெட்டுகளால் 2-ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று நிலை தடுமாறியுள்ளது.
3-ம் நாளான இன்று 218 ரன்கள் நியூஸிலாந்து வெற்றிக்குத் தேவை, இங்கிலாந்து வெற்றிக்கு 7 விக்கெட்டுகள் சடுதியில் தேவை. பிட்ச் பவுலர்களுக்கு பெரிய சாதகம் இல்லை என்றாலும் ஸ்விங்கிங் கண்டிஷன், அதாவது மேகமூட்ட வானிலை ஸ்விங் பவுலிங்குக்கு சாதகமாக உள்ளது. இரு அணிகளும் டெக்னிக்கலாக மிகவும் பலவீனமாக உள்ளதால் நியூஸிலாந்தை விட சாதாரணமான இங்கிலாந்து பவுலிங்கில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 113 ரன்களுக்குச் சுருண்டது. 2 ஆண்டுகளுக்குப் பின் அணிக்குள் வந்த ஆலி ராபின்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி என்னையா உட்கார வைத்தாய்? என்று ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் ஃபெயில்டு பாஸ்பால் கூட்டணியிடம் முக்கியக் கேள்வியை முன்வைத்தார்.
2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து பென் டக்கெட் (33), அறிமுக டெஸ்ட் வீரர் எமிலோ கேய் (57) ஆகியோரினால் நல்ல தொடக்கம் கண்டாலும். 1 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் என்ற நிலையிலிருந்து அடுத்த 9 விக்கெட்டுகளை 127 ரன்களுக்கு இழந்து 226 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதற்குப் பிரதான காரணம், நியூஸிலாந்தின் நேதன் ஸ்மித்தின் அட்டகாசமான ஸ்விங் பவுலிங் என்றால் மிகையாகாது. அவர் 70 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
254 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து மோசமாகத் தொடங்கியது, கேப்டன் டாம் லாதம், நடப்பட்ட 3 ஸ்டம்புகளுக்கு வெளியே இன்னொரு 3 ஸ்டம்புகள் இருந்தால் எப்படி இருக்குமோ அந்த திசையில் வீசப்பட்ட மிக வைடான பந்தை சேஸ் செய்து எட்ஜ் ஆக 2-வது ஸ்லிப்பில் நின்றிருந்த புரூக் கேட்ச் எடுக்க அட்கின்சன் முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
கேன் வில்லியம்சன் 18 ரன்களுக்கு நன்றாக செட்டில் ஆன நிலையில் ஜாஷ் டங்கின் ஒரு அதியற்புத பந்தில் எல்.பி.ஆனார். பந்து லேசாக அவுட் ஸ்விங் ஆனது. ஆனால் ஸ்டம்புக்குள் நேராக செல்லும் பந்தை கேன் வில்லியம்சன் காலில் வாங்கி எல்.பி. ஆனார். நைட் வாட்ச்மேன் வில்லோ ரூர்க் களமிறக்கப்பட்டார். ஆனால் அவரோ கடைசி ஓவரின் 5-வது பந்தில் லேட் இன்ஸ்விங்கருக்கு ஸ்டம்புகளை இழந்தார். நியூஸிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது. இன்னும் 218 ரன்கள் உள்ள நிலையில் டெவன் கான்வே 12 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார்.
முதல் நாள் ஆட்டம் பெரிதும் மழையால் பாதிக்கப்பட்டும் இரண்டு நாட்களில் 34 விக்கெட்டுகள் விழுந்து 3-ம் நாள் முடிவை நோக்கி லார்ட்ஸ் டெஸ்ட் சென்றுள்ளது. இரு அணியின் பேட்டிங்கும் சரியாக இல்லை. டெக்னிக், டெம்பரமெண்ட் என்று எதுவும் இல்லை. ஏனெனில், இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 126 ரன்கள் என்ற நிலையிலிருந்து 6 விக்கெட்டுக்கு 127 என்று ஒரு ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டின் தாய் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் எந்த நிலையில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.