கரூர்: கரூர் அருகே குடும்பப் பிரச்சினையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் சின்னக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (62). விவசாயி. இவரது மனைவி ஜானகி (60). இவர்களது மகள் சுகுணா(35). இவருக்கு, வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவருடன் திருமணமாகி ஷிவானி(10), ஆதிரன் (4) என இரு குழந்தைகள் உள்ளன.
சுகுணா மற்றும் அவரது கணவர் பிரபு இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தீபாவளிக்கு வந்துவிட்டு வேலாயுதம்பாளையம் சென்ற சுகுணா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மீண்டும் சின்னக்காளிபாளையத்துக்கு குழந்தைகளுடன் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் ராமசாமி குடும்பத்தினரின் உடல்கள் மிதப்பதாக வாங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் மற்றும் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று ராமசாமி, ஜானகி, சுகுணா, ஷிவானி, ஆதிரன் ஆகியோரின் உடல்களை மீட்டனர். இதில், 5 பேரின் கைகளும் சேலையால் கட்டப்பட்ட நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
கடிதம்: கரூர் டிஎஸ்பி ராஜராஜன் மற்றும் போலீஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். ராமசாமியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில், எங்கள் மரணத்துக்கு யாரும் காரணமில்லை என்றும், யார், யாருக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.