தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இதுவரை 3,771 வகுப்பறைகள், 107 ஆய்வகங்கள், 8 விடுதிகள் ஆகியவை ரூ.673 கோடியில் கட்டப்பட்டு, திறக்கப்பட்டுள்ளன.
மேலும், ரூ.2,009 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென்தமிழகத்தின் அறிவாலயமாகத் திகழ்கிறது. கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி மாநகரங்களில் ரூ.902 கோடியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறையில் கல்லூரி மாணவர்கள் நலனுக்காக ரூ.2,172 கோடியில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதுவரை 6 லட்சத்து 75,888 பேர் பயன்பெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் முதன்மைக் கல்வி நிறுவனமாக மாற்ற ரூ.1,380 கோடியிலான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த கடந்த 4 ஆண்டுகளில் ரூ.909 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற 54,301 பேரின் கல்விக் கட்டணங்களை அரசே முழுமையாக ஏற்று, இதுவரை ரூ.1,512 கோடி தரப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 38 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, 18,760 மாணவர்கள் கூடுதலாக பயனடைந்து வருகின்றனர்.
இதன்பலனாக உயர்கல்வி சேர்க்கையில் 47 சதவீதம் பெற்று, தேசிய சராசரியைவிட தமிழகம் முன்னணியில் உள்ளது. முக்கியமாக, மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 40,511 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நிதி ரூ.767 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரம், தொழில் துறைகளுக்கு ரூ.26,372 கோடி ஒதுக்கீடு
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு ரூ.26,372 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சுகாதாரத் துறைக்கு, இடைக்கால பட்ஜெட்டில் ரூ.22,090 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ரூ.706 கோடியில் 18,720 படுக்கைகள் வசதி கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர் விடுதி அமைக்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியில் ‘தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் - 2030’ நடைமுறைப்படுத்தப்படும். இத்துறைக்கு ரூ.4,282 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு, நடுத்தர தொழில் துறைகலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.405 கோடியில் கடனுதவி மற்றும் ரூ.83 கோடி மானியம் பெற்றுத்தர 23,879 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்கள் தரப்பட்டுள்ளன. குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல்: இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் ராம்சர் தளங்களை தமிழகம் கொண்டுள்ளது. ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ மற்றும் தொடர்புடைய திட்டங்களின்கீழ் 3,733 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்தி காடுகளை மீள் உருவாக்கும் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.