சென்னை: “மீஞ்சூரில் தினசரி 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.4,800 கோடியில் செயல்படுத்தப்படும்’’ என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் விஜய் பேசியதாவது: வடசென்னை, ஆவடி, பொன்னேரி, மீஞ்சூரில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய, மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.4,800 கோடியில் செயல்படுத்தப்படும்.
ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.500 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி, பழமையான 33 கூட்டுக் குடிநீர் திட்டங்களைச் சீரமைக்க முதல்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கப்படும்.
ரூ.410 கோடியில் சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறன் அதிகரிக்கப்படும். மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பை சீரமைக்க முதல்கட்டமாக ரூ.2,400 கோடியில் நடப்பு ஆண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும், குன்றத்தூர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ.960 கோடியில் புதிய பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சென்னை - பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த ரூ.236 கோடி செலவிடப்படும்.
திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.256 கோடியில் 9 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடியில் 10 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும் திடக்கழிவு எரிசக்தி உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும் சென்னை உட்பட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ரூ.1,850 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வெற்றித் தமிழகம் தொலை நோக்குத் திட்டத்தின்படி, ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டமாகச் சென்னை மாநகராட்சியில் 45 சதுர கி.மீ. பரப்பளவில் 35 கி.மீ. நீளத்துக்கு சாலைகள், நடைபாதைகள், பள்ளிகளைச் சுற்றி 15 கி.மீ. நீளத்துக்கு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலை வசதிகள் மற்றும் 105 சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் ரூ.110 கோடியிலும், பிற மாநகராட்சிகளில் ரூ.165 கோடியிலும் மேற்கொள்ளப்படும்.
திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ரூ.130 கோடியில் பெரிய பூங்காக்கள், மற்ற மாவட்டங்களில் ரூ.175 கோடியில் 250 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சிப் பள்ளிகளில் தரமான கல்வி, பாதுகாப்பான சூழலை உருவாக்க புதிய வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் ரூ.335 கோடியில் மேற்கொள்ளப்படும்.
சிதம்பரம் நடராஜர் தேரோட்ட விழாவை சிறப்பாக நடத்தவும், பக்தர்கள் இடையூறின்றி தரிசனம் செய்யவும், கோயிலைச் சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை, மின்சாரம், தொலைதொடர்பு கம்பிகளைத் தரைக்கு அடியில் கொண்டு சென்று வீதிகளை நவீன முறையில் சீரமைக்கவும் ரூ.36 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சியில் உள்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகளில் சாலை, அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவிடப்படும். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்தார்.