தமிழகம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சாம்பல் வெளியேற்றும் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு, மின் மோட்டார்கள் பழுது காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒர் அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இரண்டு பிரிவுகளிலும் தினசரி 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் முதலாவது பிரிவில் 2 மற்றும் 4வது அலகில் மின் உற்பத்தி செய்து வெளியேறும் சாம்பல் ஒரு பகுதியில் தேக்கி வைக்கப்படுகிறது.

இதனை 1,000 குதிரை திறன் கொண்ட மின்மோட்டார் பம்புகள் மூலமாக இரும்பு குழாய் வழியாக கொண்டு சென்று சுமார் 4 கி.மீ தூரத்தில் ஏரியில் விடப்படுகிறது.

இந்நிலையில் சாம்பல் தேக்கி வைக்கும் பகுதியில் அளவுக்கு அதிகமாக சாம்பல் தேக்கியதால் மின்மோட்டார்கள், பம்புகள் பழுதாகி சாம்பல் வெளியேற்றம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, 2 மற்றும் 4வது அலகில் 420 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, முதல் பிரிவில் 3 வது அலகில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அனல் மின்நிலையத்தில் முதல் பிரிவில் முதல் அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடந்து வருகிறது.

840 மெகாவாட் முதல் பிரிவில் 180 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. 600 மெகாவாட் கொண்ட 2வது பிரிவில் 400 மெகாவாட் மின்உற்பத்தி என மொத்தமாக 580 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் கொண்ட 2வது பிரிவில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. அனல் மின் நிலையத்தில் அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கும் சூழலால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT