ராமதாஸ்

 
தமிழகம்

4,109 பேர் விருப்ப மனு: பாமக நிறுவனர் ராமதாஸ் சொல்கிறார்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட இதுவரை 4,109 பேரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிர்வாக குழுக் கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பது தொடர்பாக ஆலோசித்தோம். விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். வரலாறு காணாத வகையில் பாமகவினர் ஆர்வத்தோடு விருப்ப மனு அளித்தனர். இதுவரை 4,109 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.

நாங்கள் சேரும் கூட்டணி தான் சிறந்த கூட்டணி, நல்ல கூட்டணி, நியாயமான கூட்டணி என்று மக்கள் பேசுமளவுக்கு கூட்டணி அமைக்கப்படும். பாமகவில் இருந்து அன்புமணி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அன்புமணி பாமக தலைவர் எனக் கூறக்கூடாது. பாமக செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக்குழு ஆகிய 3 குழுவிலும் அவர் பாமக உறுப்பினராக இருக்க முடியாது என முடிவெடுத்த நிலையிலும், அவர் தொடர்ந்து பாமக தலைவர் என சொல்லிக் கொண்டு திரிகிறார்.

இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். பாமக தலைவர் நான் தான் என அன்புமணி சொல்லித் திரிவதை ஊடகங்கள் வெளிப்படுத்தக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன். அவர் கூறுவதை ஊடகங்கள் வெளியிடுவது தனக்கு வருத்தமளிக்கிறது. டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி கட்சிக் கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை அன்புமணி உபயோகப்படுத்தக் கூடாது.

மீறிப் பயன்படுத்தினால் நீதிமன்ற அவமதிப்பாகும். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வாக்குறுதி அளித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் வாக்குறுதி என்பது எப்படியாவது ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் தான் அதற்கு தீர்ப்பு கூற வேண்டு்ம் என்றார்.

SCROLL FOR NEXT