தமிழகம்

டெல்லி அடுக்குமாடி கட்டிட விபத்து: பலி 6 ஆக அதிகரிப்பு - தொடரும் மீட்புப் பணி

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: டெல்லியின் சைதுலாஜாப் பகுதியில் உள்ள சாகேத் மெட்ரோ நிலையம் அருகே சனிக்கிழமை (மே 30) மாலை நான்கு மாடி வணிகக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 10 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

சாகேத் மெட்ரோ நிலையம் அருகே சனிக்கிழமை மாலையில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க இரவு முழுவதும் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி தீயணைப்புத் துறை, டெல்லி காவல்துறை, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், டெல்லி மாநகராட்சி, குடிமைப் பாதுகாப்பு மற்றும் கேட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை ஈடுபட்டுள்ளன.

மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த, கனரக இயந்திரங்கள், ஹைட்ராலிக் கட்டர்கள், ஜிபிஎஸ் கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்கள் மீட்புக் குழுக்களால் பயன்படுத்தப்பட்டன. காயமடைந்து மீட்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சனிக்கிழமை இரவு 7:44 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து டெல்லி பேரிடர் மீட்புப் படைக்கு அழைப்பு வந்துள்ளது. இதன்பின்னர் உடனடியாக மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டன. அருகில் நின்ற ஒருவர் எடுத்த காணொளியில், கட்டிடம் இடிந்து விழுந்த காட்சிகள் பதிவாகியுள்ளது.

சைதுலாஜாபில் உள்ள வெஸ்டர்ன் மார்க்கில், பல்வேறு பேயிங் கெஸ்ட் தங்குமிடங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் மாணவர் உணவகங்கள் உள்ள இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடிபாடுகளிலிருந்து ஒன்பது பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் எட்டு பேர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் மீட்கப்பட்ட ரவி என்பவர், மருத்துவமனைக்கு வந்தடைந்தவுடன் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT