சென்னை/கும்பகோணம்: நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க முதல்வர் விஜய் உத்தரவின்படி ஆதவ் அர்ஜூனா உட்பட 4 அமைச்சர்கள் நேற்று டெல்லி விரைந்தனர். மேலும் கும்பகோணத்தில் இருந்து சென்ற 36 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேபாள வெள்ளத்தில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்’ நிறுவனம் மூலம் கடந்த 23-ம் தேதி இரவு கைலாய யாத்திரைக்குச் சென்றுள்ளனர். அவர்களும் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். எனினும், வெள்ளத்தில் இருந்து தப்பிய 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், வெள்ளத்தில் சிக்கியவர்களில் கடலூரைச் சேர்ந்த திருமாவளவன் (62) என்பவர் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட 21 பேரும் தற்போது திரிசூலி பகுதியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 36 பேரைத் தேடும் பணியில் இந்தியா, நேபாளம், சீனா ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேபாளத்துக்குத் தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் கைலாஷ் யாத்திரைக்காக 2 குழுக்களாகச் சென்றுள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உட்பட பலர் காணாமல் போயுள்ளனர். இப்பேரிடரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய வெளியுறவுத் துறை, நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம், டெல்லி தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பயண முகவர் நிறுவனங்களின் உதவியுடன் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெல்லி தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆசிஷ் குமார் தலைமையிலான குழுவினர் நேபாளத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டார். மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையைக் கண்டறிந்து மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, வேளாண் துறை அமைச்சர் ர.வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் ரெ.சதீஸ் ஆகியோர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு, மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதுடன், நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும், அவர்களைப் பத்திரமாகத் தமிழகம் அழைத்து வரவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி 4 அமைச்சர்களும் நேற்று டெல்லி விரைந்தனர்.