வேலூர் மாவட்டம் பூதூரில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்ட பயனாளியின் வீட்டுக்குச் சென்று பார்வையிட்ட முதல்வர். (கோப்புப் படம்)
சென்னை: திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள் கட்டப்பட்டுள்ளதுடன், 25.56 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள குடிசைகள் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு எல்லோர்க்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பது திராவிட மாடல் அரசின் இலக்கு. இதற்காக 2030-ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது.
ஏழை மக்கள் வீடு கட்டிக்கொள்ள தலா ரூ. 3 .50 லட்சம் வீதம் 2 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை அனுமதித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் இரண்டே ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகளில் 1,79,850 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மீதி வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த ஆண்டில் மேலும் 1 லட்சம் வீடுகள் ரூ. 3,500 கோடியில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016- 21 ஐந்து ஆண்டுகளில் முந்தைய ஆட்சியில் 1 லட்சம் வீடுகள் தான் கட்டப்பட்டன. ஆனால் 2024-26 இரண்டே ஆண்டுகளில் 1,79,850 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, மேலும் 1,20,150 வீடுகள் கட்டப்படுகின்றன.கலைஞர் கனவு இல்லம் திட்டம் மட்டுமல்ல, இலங்கை தமிழர்களுக்கு ரூ.589 கோடியில் 10,045 நிரந்தர வீடுகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 7,469 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ரூ.3,058 கோடியில் 2.63 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின்கீழ் ரூ.8,384 கோடியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, மேலும் 53,467 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தில் முந்தைய 2016-2021 கால ஆட்சியில் 27,688 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், 2021-26 திமுக ஆட்சியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.482 கோடியில் 5281 உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வீட்டுமனை பட்டாக்கள்: கடந்த 5 ஆண்டுகளில் 23.56 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பழங்குடியினருக்கான தொல்குடி திட்டத்தில் ரூ. 221 கோடியில் 7,674 பேருக்கு வீடுகள் கட்டப்பட்டுளன. ஒற்றைச்சாளர முறை திட்டத்தில் 24,446 மனைப்பிரிவு விண்ணப்பங்களுக்கும், 2002 கட்டிட அனுமதி விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமாக திமுக அரசு 5 ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் 4,29,394 வீடுகளைக் கட்டியுள்ளது. ரூ.482 கோடியில் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் 5,281 கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 25.56 லட்சம் ஏழைகளின் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.